கரையை கடந்தது `நாடா` புயல்
நாடா புயல் வலுவிழந்த நிலையில் காரைக்கால் அருகே கரையை கடந்தது.
சென்னை: நாடா புயல் வலுவிழந்த நிலையில் காரைக்கால் அருகே கரையை கடந்தது.
கடந்த மாதம் 29-ம் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. அதனைத் தொடர்ந்து மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, தென்மேற்கு திசை வழியாக தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்தது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு புதன்கிழமை புயலாக உருவானது. வங்கக்கடலில் உருவான இந்த புயலுக்கு "நாடா" என்று பெயரிடப்பட்டது. நடா புயலின் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
அதற்கேற்ப, கடந்த புதன்கிழமை இரவில் இருந்து தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருந்த நாடா புயலின் வேகத்திலும் வியாழக்கிழமை காலையில் மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக நாடா புயல் நேற்று பகலில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது இன்று காலை கரையைக் கடந்தது.
நாடா கரையை கடந்தாலும் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மாநிலத்தின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் தற்போது கரையை கடந்துள்ள நிலையில் இன்னும் 12 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி மற்றம் கேரள பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மீனவர்கள் இன்னும் 12 மணி நேரத்திற்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.