ஃபானி புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்க கடலில் உருவான ஃபானி புயல், மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த ஃபானி புயல், அடுத்த 24 மணி நேரத்தில், அதிதீவிர புயலாக மாறும் என்றும் தெரிவித்துள்ளது. 


தென்கிழக்கு வங்க கடலில் வெள்ளிக்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று புயலாக உருவெடுத்தது. வங்க கடலில் உருவாகியுள்ள போனி புயல், சென்னையிலிருந்து தென்கிழக்கே, ஆயிரத்து 50 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம், காலை 8.30 மணியளவில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஃபானி புயல், கடந்த 6 மணி நேரத்தில், மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த 12 மணி நேரத்தில், அதாவது, இன்றிரவு 8.30 மணி வாக்கில், தீவிர புயலாக மாறும் என்றும் கணித்துள்ளது. இந்த ஃபானி புயல், அடுத்த 24 மணி நேரத்தில், அதாவது, நாளை காலை 8.30 மணியளவில், அதிதீவிர புயலாக உருவெடுக்கும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. பொரும்பாலும், மே ஒன்றாம் தேதி, வடமேற்கு திசையை நோக்கி, ஃபானி புயல் நகரும் என்று கூறியிருக்கும் இந்திய வானிலை மையம், எந்தெந்த பகுதிகளை நோக்கி நகரும் என்பதை, அதவாது, தமிழ்நாட்டை நோக்கி நகருமா என இம்முறை தெரிவிக்கவில்லை.


மே ஒன்றாம் தேதிக்குப் பிறகு, ஃபானி புயல், திசைமாறி, வடகிழக்கு திசையை நோக்கி நகரக் கூடும் என்றும், இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின், வடக்கு கடலோர பகுதிகளில், நாளையும், நாளை மறுநாளும், லேசானது முதல் மிதமானது வரையில், மழை பெய்யக் கூடும் என்றும் கூறியுள்ளது. ஃபானி புயலால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. வடக்கு தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில், நாளையும், நாளை மறுநாளும், மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரையில், காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில கடலோர பகுதிகளில், நாளை முதல், மே ஒன்றாம் தேதி வரை, கடல்சீற்றத்துடன் காணப்படும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் புயல் எச்சரிக்கை காரணமாக 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வேதாரண்யம் தாலுகாவுக்கு உட்பட்ட கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் உள்பட10-க்கு மேற்பட்ட மீனவ கிராமங்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.