தமிழக மீனவர்களின் 42 படகுகளை நிபந்தனையுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை கடற்படையினரால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 950-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். 145 படகுகள் கைப்பற்றப்பட்டன.


தற்போது 11 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். 145 படகுகளும் இலங்கை கடற்படை வசம் உள்ளன.


இந்நிலையில் இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர, கொழும்பில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:-


2015-ம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 42 படகுகள் மீண்டும் இலங்கையின் கடற்பகுதிக்குள் நுழையக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுவிக்கப்பட உள்ளன. இது குறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.


தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கிறோம் என்பதற்காக இலங்கை பகுதியில் அவர்களை மீன் பிடிக்க அனுமதிக்கிறோம் என்று அர்த்தம் அல்ல. இலங்கை பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள். 


இவ்வாறு மீன்வளத்துறை அமைச்சர் கூறினார்.