இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு உரியது: டெல்லி HC தீர்ப்பு!!
ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!
ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர், அதிமுக இரண்டாக உடைந்தது. பின்னர் ஓபிஎஸ்- இபிஎஸ் இணைந்த நிலையில் சசிகலா- தினகரன் தனியாக ஒதுக்கப்பட்டனர். இதையடுத்து ஓபிஎஸ்- இபிஎஸ் மற்றும் சசிகலா- தினகரன் ஆகிய இரு தரப்பினரும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடினர். இதனால், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை கடந்த 2017 மார்ச் மாதம் முடக்கியது.
தொடர்ந்து, இது தொடர்பான வழக்கில் இரட்டை இலை சின்னம் அதிமுகவின் ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்புக்கு தான் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் கடந்த 2018 நவம்பர் 23ல் தீர்ப்பு வழங்கியது. தேர்தல் ஆணையத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தினகரன் மற்றும் சசிகலா ஆகிய இருவரும் தனித்தனியாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்ற நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரது மேல்முறையீடு மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.