யூ-டியூப் உதவியுடன் கர்ப்பிணிக்கு பிரசவம்: கணவர் மீது வழக்கு!
யூ டியூப் உதவியுடன் பிரசவம் பார்த்ததில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில் பொது சுகாதாரத்துறை அளித்த புகாரின் பேரில் கணவர் மீது திருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு
யூ டியூப் உதவியுடன் பிரசவம் பார்த்ததில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில் பொது சுகாதாரத்துறை அளித்த புகாரின் பேரில் கணவர் மீது திருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சாலையில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் கார்த்திகேயன் என்பவர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிருத்திகா அதே பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கார்த்திகேயனின் நண்பரான பிரவீன் மகள் இயல்மதி என்பவர் சுகப்பிரசவத்தில் வீட்டிலேயே பிறந்ததாகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக பிரவீன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் தனக்கும் சுகப்பிரசவம் வீட்டிலேயே நடக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார் கிருத்திகா.
இதனை அடுத்து கார்த்திகேயன் கிருத்திகா தம்பதியினர் இணையதளத்தில் உள்ள youtube மூலமாக பல்வேறு சுகப்பிரசவம் குறித்த வீடியோக்களை பார்த்து கார்த்திகேயன் குடும்பத்தினர் கிருத்திகாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
அப்போது கிருத்திகாவிற்க்கு பெண் குழந்தை நல்ல விதமாக பிறந்துள்ளது எனினும் நஞ்சுக்கொடியானது வெளியே வராததால் கிருத்திகா மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் கிருத்திகா. இச்சம்பவம் குறித்து புதுப்பாளையம் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது, கணவர் மீது திருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபோன்று பிரசவம் பார்த்தால் கைது செய்ய நடவடிக்கை என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது!