தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகை 4458 கோடி ரூபாயை திரும்ப பெற நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

GST மூலம் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை குறைக்க, மத்திய அரசு இழப்பீடு தொகை வழங்கி வருவதாக குறிப்பிட்ட அவர், அந்த வகையில், 2017-18 ஆம் ஆண்டிற்கு 632 கோடியும், 2018-19-ஆம் ஆண்டிற்கு 4724 கோடி ரூபாயும் தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கவுள்ளது என தெரிவித்துள்ளார். இதில் நிலுவை தொகையாக மொத்தம் 939 கோடி ரூபாய் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


GST-க்கு முன்பு மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய நிலுவை தொகையையும் சேர்த்து ஆக மொத்தம் 4,458 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையாக உள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


முன்னதாக சட்டப்பேரவையில், கேள்வி நேரம் முடிந்த பிறகு திமுக உறுப்பினர் சேகர்பாபு, சென்னையில் சாலைகளின் ஓரம் வசிக்ககூடிய மக்களுக்கு, வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். 


அப்போது பேசிய அவர், சென்னையில், சாலை ஓரங்களில் வசிக்கும் மக்கள் வீடுகளின்றி தவித்து வருவதாக குறிப்பிட்டார். அதற்கு பதில் அளித்து பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், தமிழகத்தில் குடிசைகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, அதன்படி 15 லட்சம் மக்களுக்கு, 75 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 


தற்போது வரை 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஒ.பன்னீர்செல்வம், தமிழகத்தை குடிசைகளற்ற மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.