கட்டுப்பாடுகளும் தளர்வுகளும் அறிவித்தாலும் தேவையை உணர்ந்து ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசு ஊரடங்கை மே 17 ஆம் தேதி வரை நீட்டித்து தளர்வு, கட்டுப்பாடுகள் விதித்திருப்பது - கடைகள் திறக்கவும், தொழில்கள் தொடங்கவும் வழி வகுத்தாலும் இவையெல்லாம் குறிப்பிட்ட துறையைச் சார்ந்தவர்களுக்கும், அவசர, அவசியத்தேவைக்காக வெளியில் செல்லும் மக்களுக்கு மட்டும் தான் என்பதை பொது மக்கள் கவனத்தில் கொண்டு ஊரடங்கை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... 
மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்திருப்பது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், பொது மக்களை பாதுகாக்கவும் பயன் தரும். அதே சமயம் கொரோனா பாதித்த மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என 3 வண்ணங்களாக வகைப்படுத்தப்பட்டு, பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஊரடங்கில் தளர்வும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. தளர்வும், கட்டுப்பாடுகளும் எதற்காக என்றால் நோயைக் கட்டுப்படுத்த மட்டுமல்ல தொழில்கள் முடங்கிவிடக்கூடாது,, பொருளாதார ரீதியாக முடக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


குறிப்பாக அனைத்து துறையையும் இயக்க முடியுமா, சிறு குறு நடுத்தர தொழில் தொடங்க வாய்ப்பு இருக்கிறதா, மக்கள் வாழ்வாதாரத்தை தொடரலாமா, வருமானம் ஈட்ட வாய்ப்பிருக்கிறதா போன்றவற்றையெல்லாம் பொருளாதார வல்லுநர்கள், பல்வேறு துறையைச் சேர்ந்த நிபுணர்கள் போன்றோருடன் ஆலோசனை செய்த பிறகே ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வு, கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது.


எனவே பாதுகாப்பாக தொழிலைத் தொடங்கவும், மக்களுக்கு வருமானம் கிடைக்கவும், பொருளாதாரத்தை உயர்த்தவும் புதிய விதிமுறைகளுடன் ஊரடங்கை மேலும் நீட்டித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த தளர்வு, கட்டுப்பாடுகள் எல்லாம் கடைகள் திறக்கவும், தொழில்கள் தொடங்கவும் வழி வகுத்தாலும் இவையெல்லாம் பொது மக்கள் அனைவருக்கும் பொருந்தாது. அதாவது குறிப்பிட்ட துறையைச் சார்ந்தவர்களுக்கும், அவசர, அவசியத்தேவைக்காக வெளியில் செல்லும் மக்களுக்கு மட்டும் தான் என்பதை பொது மக்கள் கவனத்தில் கொண்டு ஊரடங்கை முறையாக கடைபிடிக்க வேண்டும்.


எனவே நீட்டிக்கப்படிருக்கிற ஊரடங்கை மக்கள் தடையென்று நினைக்காமல் மக்களின் வருங்கால நல்வாழ்விற்கான, முன்னேற்றத்திற்கான இடைவெளி என்று நினைத்து செயல்பட்டால், நிச்சயமாக இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம். மேலும் கொரோனா என்ற கொடிய நோயினால் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் மக்கள் அடைந்துள்ள சிரமத்தை தங்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும், நாட்டிற்காகவும் தாங்கிக்கொண்டு மீண்டும் நாட்டின் பொருளாதாரம் வளம் பெற அடித்தளமாக செயல்பட வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.