தடையை மீறி ஜல்லிக்கட்டு; கைது செய்யுங்கள்- சீமான் அறிவிப்பு
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
மதுரை அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நாம் தமிழர் கட்சி தலைமையில் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:-
கடும் வறட்சியினால் பயிர்கள் கருகிய நிலையில் கடன் தொல்லையால் தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானங்களைத் தாங்க இயலாது தங்களது உயிர்களையே மாய்த்துக்கொள்ளும் விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்வதை உடனடியாகத் தடுத்து நிறுத்தாமலும், அனைத்து விவசாயிகளின் விவசாயக் கடன்களை உடனடியாகத் தள்ளுபடி செய்யாமலும் அவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க மறுத்து வரும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து சீமான் கண்டனவுரையாற்றினார்.
மேலும் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த யாரிடமும் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டாம். களத்தில் இறங்கித்தான் சில உரிமைகளை பெற முடியும். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும், அவசர சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசிடம் நாங்கள் கேட்க மாட்டோம். அலங்காநல்லூர், பாலமேட்டில் தடையை மீறி என் தலைமையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துவேன். அப்போது என்னை கைது செய்வதாக இருந்தால் கைது செய்யுங்கள்.. கவலைப்படமாட்டேன் என சீமான் கூறினார்.