தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் - சீமான்
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி அலங்காநல்லூரில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதம் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமான் அவர்களும் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அப்பொழுது பேசிய சீமான் கூறியதாவது:-
ஆங்கிலேயர், முகலாயர், பாரசீகர் மற்றும் ஜமீன்தார் ஆட்சிகளில் கூட ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை. பீட்டா தமிழர்களின் பாரம்பரியத்தையும், வீரத்தையும் அழிக்க நினைக்கிறது.காளைகளை வைத்து யாரும் சர்க்கஸ் நடத்தவில்லை. அதில் பங்குபெறும் யானை, சிங்கம், ஒட்டகம் போன்ற காட்சிப் படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் காளைகளை சேர்த்ததே கண்டனத்துக்குரியது. நாட்டு மாடுகளில் தான் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க சத்தான பால் கிடைக்கிறது. கலப்பட பால் பொருட்களை விற்க முயலும் பன்னாட்டு நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும்தான் ஜல்லிக்கட்டு நடக்கக் கூடாது என்பதற்காக பல கோடிகளை செலவிடுகிறது.
கேரளம், கர்நாடகம், ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க நீதிமன்றம் பல தீர்ப்புகளை அளித்தது. இதை எந்த மாநிலமும் முறையாக பின்பற்றவில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஜல்லிக்கட்டை 2 ஆண்டுகளாக நடத்த முடியாத நிலை உள்ளது.
கேரளாவில் யானை பந்தயம், ராஜஸ்தானில் ஒட்டக ஓட்டம் தற்போது வரை தடையின்றி நடக்கின்றன. காலப்போக்கில் தைப்பொங்கல் உள்ளிட்ட பாரம் பரிய திருவிழாக்களைக்கூட கொண்டாட முடியாத அவல நிலை ஏற்படும். இதை தவிர்க்க தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம். இதற்கு தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவோம் என்றார்.