வறுமை, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க விடுதலை நாளில் உறுதியேற்போம் என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., "இந்தியாவின் 73-ஆவது விடுதலை நாள் விழா நாளை கொண்டாடப்படவிருக்கும் நிலையில்,  இந்திய மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


72 ஆண்டுகளுக்கு முன் சுதந்திர இந்தியா கனவுகளுடன் பிறந்தது. அதன்பின் 72 ஆண்டுகள்  ஆகிவிட்ட நிலையில், இந்தியாவில் சமத்துவம், சமூகநீதி, வறுமை ஒழிப்பு உள்ளிட்டவை சார்ந்த இலக்குகள் இன்னும் கனவாகவே உள்ளன. உலகப் பணக்காரர்களில் கணிசமானவர்களைக் கொண்டுள்ள இந்தியாவில் தான் பட்டினியில் வாடும் பரம ஏழைகளும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவ்வாறாக இந்தியா என்ற ஒற்றை நாட்டில் இரு விதமான இந்தியாக்கள் காணப்படுகின்றன.


உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவின் தாக்கம் இந்தியாவையும் வாட்டத் தொடங்கியுள்ளது. வாகன உற்பத்தித் துறையில் மட்டும் கடந்த சில மாதங்களில் 3 லட்சத்திற்கும் கூடுதலானவர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். பொருளாதார மந்தநிலை தொடரும் பட்சத்தில்  வேலையிழப்பும், அதன் காரணமாக வறுமையும் அடுத்தடுத்த மாதங்களில் அதிகரிக்கக்கூடும். ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருக்கும் நிலையில், இந்த வேலையிழப்புகள் நிலைமையை மேலும் மோசமாக்கக் கூடும். இந்த நிலையை தடுக்க வேண்டும். அதற்காக இந்தியாவை பாதுகாக்கப்பட்ட பொருளாதாரமாக மாற்றத் தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், கடனில்லாத வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை என்பதைப் போன்று வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் இல்லாத இந்தியா தான் உண்மையான  விடுதலை பெற்ற நாடாகும். எனவே, இந்தியாவில் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை ஒழிக்கவும், அமைதி, வளம், செழிப்பு, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவற்றை பெருக்கவும் இந்தியாவின் 73-ஆவது விடுதலை நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.