தமிழகத்தில் நடந்த முடிந்த இரு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுக-விற்கு சாதகமாய் வெளியாகி வரும் நிலையில்., ‘இடைத்தேர்தலில் அதர்மத்தை தோற்கடித்து தர்மம் வென்றுள்ளது’ என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் எல்லாம் தவிடு பொடியாகிவிட்டன என குறிப்பிட்ட அவர், விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அதர்மத்தை தோற்கடித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் பதிவான வாக்குகள் விழுப்புரம் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஈ.எஸ். பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் எண்ணப்பட்டு வருகின்றன.


275 வாக்குச்சாவடிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது.


அதே போல் நாங்குநேரி தொகுதியின் வாக்கு எண்ணிக்கை பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் 299 வாக்குச்சாவடிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக பூட்டி வைக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது.


தற்போதைய நிலவரப்படி நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 14,266 வாக்குகள் முன்னிலை பெற்று வருகிறார். விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 32,369 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.