தினகரன் அறிவித்திருந்த எம்எல்ஏ-க்கள் கூட்டம் ரத்து!!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் பிளவு பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதிமுக சின்னம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் கமிஷன் முடக்கிவைத்து இருக்கும் இரட்டை இலை சின்னத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக அதிமுக-வின் இரு அணிகளையும் சேர்ப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது.
அதிமுக அணிகள் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வமும் கருத்து தெரிவித்து இருந்தார். அவர் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் செய்தி வெளியானதால், விரைவில் இரு அணிகளும் ஒன்றாக இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்.
கட்சியின் எதிர்காலம் குறித்தும், ஆட்சியை தொடர்ந்து நடத்துவது குறித்தும் அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்தினோம். அதில் கட்சியின் ஒட்டுமொத்த கருத்து, தமிழ்நாட்டில் உள்ள அ.தி.மு.க. தொண்டர்களின் ஒட்டுமொத்த விருப்பமும், மக்களின் ஒட்டுமொத்த விருப்பமும் என்னவென்றால், கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான்.
வெளிப்படையாக சொல்வதென்றால், டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து முழுமையாக ஒதுக்கி வைத்து விட்டு கட்சியையும் ஆட்சியையும் நடத்த வேண்டும் என்பதே அடிமட்ட தொண்டர்களின் விருப்பம் என்று கூறியிருந்தார். இது ஒருபுறம் இருக்க டிடிவி தினகரனுக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக (அம்மா) அணி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று டிடிவி தினகரன் அறிவித்து இருந்தார். தற்போது அது தீடிரென ரத்து செய்யப்பட்டது.