தினகரனுடன் டெல்லி போலீஸ் சென்னை புறப்பட்டது
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
கடந்த 16-ம் தேதி டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சத்தையும், 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தியபோதுதான், அவர் மூலம் டிடிவி தினகரன் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, டெல்லி போலீசார் டிடிவி தினகரனை டெல்லிக்கு வரவழைத்து கடந்த சனிக்கிழமை முதல் 4 நாட்கள் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். இதேபோல் அவரது உதவியாளர் ஜனார்த்தனன், நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
4-வது நாள் விசாரணை நடந்து முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தினகரனை போலீசார் கைது செய்தனர். தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது பற்றி சுகேஷ் சந்திரசேகருடன் தினகரன் தொலைபேசியில் பேசியதற்கான ஒலிப்பதிவு ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. டி.டி.வி.தினகரனுடன் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, அவர்கள் இருவரையும் டெல்லி லஞ்ச ஒழிப்பு தனி கோர்ட்டில் நீதிபதி பூனம் சவுத்ரி முன்பு நேற்று பிற்பகல் 3 மணிக்கு போலீசார் ஆஜர்படுத்தினார்கள். இதற்காக அவர்களை டெல்லி போலீஸ் உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத் தனது காரிலேயே அழைத்து வந்தார்.
அவர்கள் இருவரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் வக்கீல் பல்பீர் சிங் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி பூனம் சவுத்ரி, ரூ.50 கோடி கைமாறியதாக போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் ரூ.1 கோடியே 30 லட்சம்தானே பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த தொகையை மட்டும்தானே முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு வக்கீல் பல்பீர் சிங், ‘‘டெல்லிக்கு ஹவாலா மூலம் முதலில் ரூ.10 கோடி வந்து சேர்ந்துள்ளது. இதில்
ரூ.1 கோடியே 30 லட்சம் முதலில் கைதான சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. மீதம் உள்ள ரூ.8 கோடியே 70 லட்சம் எங்கே என்று தெரியவில்லை. மேலும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள், அரசு அதிகாரிகளுடன் அவருக்கு உள்ள தொடர்பு பற்றியும் விசாரிக்க வேண்டி இருக்கிறது’’ என்றார்.
சுகேஷ் சந்திரசேகரை தொடர்பு கொண்டு பேச பல செல்போன்களை டி.டி.வி.தினகரன் பயன்படுத்தி இருப்பதாகவும், அவற்றை போலீசார் கைப்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாகவும், விசாரணைக்காக அவரையும், சுகேஷ் சந்திரசேகரையும் சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டி இருப்பதாகவும் பல்பீர் சிங் தனது வாதத்தின் போது தெரிவித்தார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தேர்தல் முறையின் புனிதத்தன்மையை குறைத்து மதிப்பிட்டு விட்டதாகவும், இவர்கள் தங்கள் விருப்பத்துக்காக எதையும் செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்த பணம் தேர்தல் கமிஷனுடன் தொடர்பில் இருக்கும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த வகையில் 7 அதிகாரிகள் மீது போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர். அவர்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோருக்கு போலீஸ் காவல் விசாரணை முடியும் போது, அந்த அதிகாரிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நேற்று டெல்லி குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த டி.டி.வி.தினகரனை அவரது மனைவி அனுராதா மற்றும் மகள் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது டி.டி.வி.தினகரன் தான் அணிந்திருந்த சங்கிலி, மோதிரம், கைக்கெடிகாரம் ஆகியவற்றை கழற்றி தனது மனைவியிடம் கொடுத்தார்.
இதேபோல் மல்லிகார்ஜூனாவை அவரது மகன் சந்தித்து பேசினார்.