விதிமுறைகளை பின்பற்றியே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது - TN Govt
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்க என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு!!
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்க என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு!!
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் திமுக மனுத் தாக்கல் செய்தது. இதன் மீது வியாழக்கிழமையன்று விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பளித்தது. அதில், 9 மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பாணையை திரும்ப பெற்ற தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் தேதியை சனிக்கிழமையன்று அறிவித்தது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில், இன்று, புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பின்பற்றாமல் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
தீர்ப்பைப் பின்பற்றி இட ஒதுக்கீடு மற்றும் வார்டு மறுவரையரை பணிகளை முடித்த பின்னரே தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் புதிய மனுவை ஏற்றுக் கொண்டிருக்கும் உச்சநீதிமன்றம், அதன்மீது, நாளை மறுநாள் புதன்கிழமையன்று விசாரணை நடைபெறும் என அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், விதிகளுக்கு உட்பட்டு 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, திமுக-வின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.