அம்மா அணி என்றழைக்கப்பட்ட கட்சியின் பெயரை மாற்றீ 'அண்ணா திராவிட கழகம்' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார் சசிகலாவின் சகோதரர் திவாகரன்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அ.தி.மு.க ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என பிரிந்தது. இதில் சசிகலா அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கப்பட்டார். பின்னர் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்தனர். இதன் பின் ஓபிஎஸ் துணை முதல்வராக பதவிவகித்தார். 


இதையடுத்து, தனித்து விடப்பட்ட சசிகலா தரப்பில் இருந்த அணியை தினகரன் வழிநடத்தினார். அவர் ஆர்.கே.நகர் இடைதேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இந்நிலையில், இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை உருவாக்கினார்.


அதன் கொடியில் சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை நிறம் இருந்தன. மேலும் கொடியின் நடுவே ஜெயலலிதாவின் படம் இருந்தது. அதன் பிறகு சசிகலாவின் சகோதரர் திவாகரன் மற்றும் தினகரன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதால் இருவரும் மாற்றி மாற்றி ஊடகங்களில் குறை கூறினார். சிறையில் இருந்த சசிகலாவின் ஆதரவும் தினகரன் பக்கம் இருந்தது. இதனால், "இனி சசிகலாவை அக்கா என்று கூறமாட்டேன்" என்று திவாகரன் தெரிவித்தார். 


இந்நிலையில், இவர் மன்னார்குடியில் புதிய கட்சியை இன்று துவங்கினார். அதற்கு 'அண்ணா திராவிட கழகம்' என பெயர் வைத்துள்ளார். இக்கட்சியின் கொடியில் சிவப்பு, வெள்ளை, கருப்பு நிறங்களும் கொடியின் நடுவே பச்சை நிறத்தில் நட்சத்திரமும் உள்ளது. மேலும், இந்த கட்சியின் பொதுச்செயலாளராக தானே செயல்படுவேன் என திவாகரன் தெரிவித்துள்ளார். புதிய கட்சி கொடியில் உள்ள கருப்பு, சமுதாயத்தின் ஏற்ற தாழ்வுகளை குறிக்கிறது என்று விளக்கம் தந்துள்ளார்.