காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட நிபுணர் குழுவுடன் 7 ஆம் தேதி ஆய்வு செய்வதாக கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கை ஏற்றுக் கொண்ட மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக நீர்ப்பாசன துறைக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 2வது ஆலோசனைக் கூட்டத்தில், கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


மேகதாது அணை குறித்த வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன், மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்தால் மட்டும் போதாது, காவிரி மேலாண்மை ஆணையமும் அனுமதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.


இதனிடையே, மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக வரும் 7 ஆம் தேதி நிபுணர் குழுவுடன் சென்று ஆய்வு நடத்த இருப்பதாக கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை 5 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் என்றார்.


64 டிஎம்சி தண்ணீர் சேமிக்கும் அளவுக்கு முதல்கட்ட அறிக்கை தயாரித்துள்ளதாக சிவக்குமார் தெரிவித்தார். புதிய அணையில் இருந்து ஒரு ஏக்கர் கூட விவசாயத்திற்கு பயன்படுத்தப் போவதில்லை என்றும், 95 சதவீதம் தமிழகத்திற்கு வசதியாக இருக்கும் என்றும் அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.