சென்னையில் சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகள் மிகவும் பழுதடைந்து பயணிகள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போரூர் - குன்றத்தூர் ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், பல்வேறு விபத்துக்கள் அந்த சாலையில் நடந்து வருகிறது. மேலும் அந்த பகுதில் உள்ள பள்ளிகளுக்கு, குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும்பொழுது குண்டும், குழியுமாக இருப்பதால் விழுந்து எழுகின்ற அவல நிலையை தினந்தோறும் அங்கு பார்க்க முடிகிறது. அதுமட்டுமில்லாமல் அந்த சாலையில் லாரிகள் செல்வதால், லாரி சக்கரங்கள் பள்ளத்தில் மாட்டிக்கொள்வது போன்ற பல்வேறு இடைஞ்சல்களை பயணிகள் தினந்தோறும் சந்தித்து வருகின்றனர். நான் குடியிருக்கும் பகுதியான சாலிகிராமம் மற்றும் சென்னையில் இருக்கின்ற பல்வேறு பகுதிகளில், சாலைகள்மிகவும் பழுதடைந்த நிலையைக் காணமுடிகிறது. இது ஆறு மாத காலத்திற்கு மேலாக இந்த நிலையிலேயே இருந்தும், அதில் கவனம் செலுத்தாமல் கவனக் குறைவாக இருப்பது அந்த பகுதி மக்களை வேதனையடையச் செய்துள்ளது.


மழை காலம் தொடங்கியிருப்பதால் சேறும், சகதியுமாக மாறி அந்த பகுதி மக்கள் பயணிக்கவே இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே இதுபோன்று சென்னையில் உள்ள பலபகுதிகளில் பயணிகளின் பாதுகாப்பை கருதி இந்த அரசு உடனடியாக சாலை சீரமைப்பு பணிகளில் கவனம் செலுத்தி, அனைத்து பகுதிகளிலும் துரிதநடவடிக்கையில் ஈடுபட்டு சாலைகளை பராமரிக்க வேண்டும்.


உள்ளாட்சித் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அதனால் சாலைகள் சீரமைப்பு செய்யவில்லை என்ற காரணம் ஒரு பக்கம் இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தல் வரும்போது வரட்டும், அதுவரைக்கும் இந்த சாலைகள் இவ்வாறு இருந்தால் ஒட்டுமொத்த பயணிகளும் அந்த சாலையை கடக்கும் பொழுது மிகப்பெரிய விபத்துகளையும், கஷ்டங்களையும், சந்திக்க வேண்டி இருக்கிறது.


எனவே மக்களின் நிலையை அறிந்து தமிழக அரசாங்கம் சாலை சீரமைப்பு பணிகளில் முழு கவனம் செலுத்தி, சட்டப்பேரவையில் சென்னை முழுவதும் சாலை பாதுகாப்பு பணிக்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 300 கோடியும், தமிழகம் முழுவதும் சாலை சீரமைப்புக்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் ஆயிரம் கோடியும் அறிவித்ததை மக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டுவந்து, பாதுகாப்பான ஒரு பயணத்தை ஏற்படுத்திதர வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.