சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவுள்ளன. தேர்தலுக்கான பிரச்சாரத்திலும், பணிகளிலும் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்த விஷயத்தில் சுமுகமான முடிவை எட்ட முடியாமல் போனதால், ஆளும் அதிமுகவின் கூட்டணி கட்சியாக இருந்த தேமுதிக செவ்வாய்க்கிழமை கூட்டணியில் இருந்து விலகியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுகவுடன் மூன்று சுற்று நீடித்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, கூட்டணியில் இருந்து விலகுவதாகக் கூறியது. அதிமுக-வில் பாஜக-வும் பாமக-வும் கூட்டணிக் கட்சிகளாக உள்ளன.


தேமுதிக (DMDK) அதிமுக-விலிருந்து விலகியதைத் தொடர்ந்து தற்போது கூட்டணி பலத்தில் ஆட்சியை வெல்ல காத்துக்கொண்டிருக்கும் சில கட்சிகள் அவர்களை அழைக்கத் தொடங்கியுள்ளனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேமுதிக-வை தனது கட்சி தலைமையிலான முன்னணிக்கு அழைத்தார். மேலும் சம எண்ணம் கொண்ட கட்சிகளையும் தங்கள் கட்சிக்கு வரவேற்றார். அவர் தலைமையிலான கூட்டணி, "மூன்றாவது அணி அல்ல, அதுதான் முதல் அணி, முன்னணி" என்று அவர் கூறினார்.


அதெபோல், அமமுக-வும் தேமுதிக-வை வரவேற்க காத்திருப்பதாக வட்டாரங்காள் தெரிவிக்கின்றன. தேமுதிக இவ்விரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றுடன் இணையும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.


கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமித்த கருத்தை எட்டியதைத் தொடர்ந்து, அதிமுகவுடன் உறவுகளை முறித்துக் கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று விஜயகாந்த் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


ALSO READ: அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்: விஜயகாந்த்


அதிமுக (AIADMK) பாமக மற்றும் பாஜகவுடன் தனது கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது. 234 இடங்களில் அவர்களுக்கு முறையே 23 மற்றும் 20 சட்டமன்ற இடங்களை ஒதுக்கியுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது.


அதிமுகவின் கடுமையான நிலைப்பாட்டால் கடுப்பான தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல் கே சுதீஷ், ஆளும் கட்சி படு தோல்வி அடையும் என்றும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழக்கும் என்றும் கூறினார்.


அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி பாமக-வின் 'பிரச்சார செயலாளர்' போல செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். கூட்டணி ஒப்பந்தம் இறுதி செய்யப்படாததற்கும் முனுசாமியையே அவர் குற்றம் சாட்டினார். முனுசாமி பாமக-வின் ஸ்லீப்பர் செல் என்று அவர் விமர்சித்தார்.


அரசியல் ரீதியாக, தேமுதிக மற்றும் பாமக கட்சிகள் 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தலின் போது பாஜகவுடனும் அதிமுகவுடனும் சேர்ந்து பயணம் செய்திருந்தாலும் நீண்ட காலமாக, இரு கட்சிகளுக்கு இடையிலும் உறவுகள் சிறப்பாக இல்லை என்பது பல தருணங்காளில் தெரிய வந்துள்ளது.


உறவுகளை முறித்துக் கொள்வதற்கான காரணம் குறித்து கேட்டதற்கு, தேமுதிக துணைச் செயலாளர் பி பார்த்தசாரதி பி.டி.ஐ யிடம் "நாங்கள் 23 தொகுதிகளியக் கேட்டோம். 2011 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வென்ற 29 இடங்களில் இருந்து இவற்றைத் தேர்வு செய்ய விரும்பினோம். ஆயினும், அதிமுக அதற்கு உடன்படவில்லை. ஆகையால், நாங்கள் உறவுகளை முறித்துக் கொள்ள முடிவு செய்தோம்” என்றார்.


அதிமுக மூத்த தலைவரும், மீன்வளத்துறை அமைச்சருமான டி.ஜெயகுமார், “தேமுதிக-வின் தொகுதிகள் குறித்த எதிர்பார்ப்பு அதன் பலத்துடன் பொருந்தவில்லை. அதன் செல்வாக்கிற்கு ஏற்ப வழங்கப்பட்ட இடங்களை ஏற்றுக்கொள்வது விவேகம். ஆனால் அக்கட்சி வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறிவிட்டது” என்றார்.


பா.ஜ.க (BJP) செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறுகையில், “தேமுதிக-வின் நடவடிக்கை துரதிர்ஷ்டவசமானது. கூட்டணி தர்மம் என்பது தற்போதைய யதார்த்தங்கள் மற்றும் வலிமையின் அடிப்படையில் ஒருமித்த கருத்தை எட்டுவதாகும்.” என்று கூறினார்.


தேமுதிக அதன் அடுத்த நடவடிக்கை குறித்து அதன் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


பிரபல நடிகர் விஜயகாந்த் 2005 இல் தனது கட்சியைத் தொடங்கி, 2006 சட்டமன்றத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் இருந்து வெற்றிபெற்றபோது, ​​அவர் தனது ஆதரவாளர்களிடையே நம்பிக்கை அலைகளை உருவாக்கினார்.


2006 ஆம் ஆண்டு அறிமுகத் தேர்தலில் 8.38 சதவீத வாக்குகளை கட்சி பெற்றது. ஆனால், கட்சியின் 232 வேட்பாளர்களில் விஜயகாந்த் மட்டுமே வெற்றியாளராக உருவெடுத்தார்.


2009 மக்களவைத் தேர்தலில் அதன் வாக்குப் பங்கை 10.08 சதவீதமாக உயர்த்திய பின்னர், தேமுதிக 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து, போட்டியிட்ட 41 இடங்களில் 29 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.


அவரது தாராள மனப்பான்மைக்காக அவரது ரசிகர்களால் 'கருப்பு எம்.ஜி.ஆர்' என்று போற்றப்பட்ட விஜயகாந்த் மக்களிடையே பெரும் பிரபலமாக இருந்தார்.


68 வயதான விஜயகாந்த் இப்போது உடல்நலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அரசியல் ரீதியாக அவர் சுறுசுறுப்பாக செயல்படவில்லை, தேமுதிக-வை அவரது மனைவி பிரேமலதாவும் அவரது சகோதரர் சுதீஷும் நடத்தி வருகின்றனர்.


2016 சட்டமன்றத் தேர்தலில், வைக்கோவின் மதிமுக, சிபிஐ-எம், சிபிஐ, விதுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய தேமுதிக -மக்கள் நல முன்னணியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் தோற்கடிக்கப்பட்டார்.


ALSO READ: அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR