டெல்லையில் தமிழக விவசாயிகளுக்கு பிரேமலதா நேரில் ஆதரவு
தமிழகத்தில் போதிய பருவமழை இன்றியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கழுத்தில் மண்டை ஓடு மாலை அணிந்தும், சவம் போல் சாலையில் படுத்தும், தூக்குக் கயிறு கழுத்தில் மாட்டியும் பல்வேறு வகைகளில் விவசாயிகள் போராட்டங்களை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் போராடி வருகின்றனர்.
29-வது நாளான இன்று விவசாயிகள் மண் சோறு சாப்பிடும் போராட்டம் நடந்தினார்கள். அவர்கள் மண் சோறு சாப்பிட்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில், இன்றும், தேமுதிக மகளிர் அணித் தலைவர் பிரேமல்தா விஜயகாந்த் நேரில் வந்து ஆதரவு தெரிவித்ததோடு, அவரும் மண்சோறு சாப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
விவசாயிகளை கண்டுகொள்ளாவிட்டால், அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடு அழிவது உறுதி. விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 29 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதை இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
ஆட்சியில் இருந்தவர்களின் நிர்வாக சீர்கேடுகளால்தான் டெல்டா பகுதி வறட்சி அடைந்துள்ளது. அணைகள் தற்போது வறண்டு உள்ள நிலையில் அதனை தூர்வார வேண்டும். நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும்.
டெல்லியில் போராடிவரும் விவசாயிகளை தமிழக முதல்வர் சந்திக்கவில்லை. தமிழக விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கும் பொறுப்பு உள்ளது என அவர் கூறினார்.