சாத்தான்குளத்தில் உயிரிழந்த விசாரணைக் கைதிகளின் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் 25 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாத்தான்குளத்தில் கொரோனாவை விட கொடூரமாக நடந்துகொண்ட காவல்துறையால், கணவன் - மகன் என இரண்டு உயிர்களைப் பறிகொடுத்துள்ள அம்மையார் செல்வராணிக்கு திமுக சார்பில் ரூ.25 இலட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். 


இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்... "கொரோனாவைவிடக் கொடூரமான முறையில் தமிழகக் காவல்துறை நடந்து கொண்ட காரணத்தால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஊரடங்கு நேரத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறையினர், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள திரு. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அனுமதித்ததன் விளைவுதான் இந்தப் பெருங்கொடூரம்.


சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தையையும் மகனையும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கியும், லத்தியை அவர்களின் பின்புறம் வழியே உடலுக்குள் திணித்துக் கொடுமைப்படுத்தியும், வேட்டி - சட்டையெல்லாம் ரத்தத்தின் நனையும் வகையில் சித்திரவதை செய்தும், நெஞ்சுப்பகுதியில் உள்ள முடிகளைப் பிய்த்தெறிந்து மிருகத்தனமாகக் கொடுமைப்படுத்தப்படுத்தி உயிர் பறிக்கப்பட்டிருப்பதை பென்னிக்சின் தாயும் - சகோதரியும் வேதனையோடும் கண்ணீரோடும் சொல்வதைக் கண்டு தமிழகமே பதறுகிறது.


READ | கைது செய்.. கைது செய்... சமூக ஊடகங்களில் கோரிக்கை #JusticeForJeyarajAndFenix


இறந்த இருவரின் உடலில் காயங்கள் நிறைந்திருப்பதை மருத்துவக் குறிப்புகளிலும் உறுதி செய்துள்ள நிலையில், உடல் கூராய்வு அறிக்கையும் எதிர்பார்க்கப்படுகிறது.


மனிதத்தன்மையற்ற இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட - துணைநின்ற அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் நீதிக்கான போராட்டத்தை ஜனநாயக சக்திகள் அனைத்தும் வலிமையுடன் தொடர வேண்டியுள்ள நிலையில், சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தி.மு.கழகம் துணை நிற்கும் என்ற உறுதியினை அளிக்கிறேன்.


கணவன் - மகன் என அன்பான இரண்டு உயிர்களைப் பறிகொடுத்து, மூன்று பெண் பிள்ளைகளின் கண்ணீருக்குப் பதில் சொல்ல முடியாமல் வேதனைத் தீயில் வெந்துகொண்டிருக்கும் அம்மையார் செல்வராணி அவர்களுக்குக் கழகத்தின் சார்பில் ஆறுதலினைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்தம் குடும்பத்திற்கு, தி.மு.கழகத்தின் சார்பில் 25 இலட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.