விழுப்புரம்: கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர் அருகே சிறுமாதுரை கிராமத்தில் மது போதையில் இருந்த இருவர் (அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள்), தனது உறவினர் பெண்ணான 14 வயது சிறுமியின் கைகளை கட்டி, அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என அரசியல் கட்சி மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் அந்த சிறுமி இறக்கும் நிலையில், முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரும் தான், தன் கைகளை கட்டி, என் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக ஜெயஸ்ரீ மாஜிஸ்திரேட் முன்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். அவரது அறிக்கையின் அடிப்படையில், விழுப்புரம் போலீசார் முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரையும் கைது செய்துள்ளனர்.


இந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தை பள்ளி சிறுமியை கை கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணியை வைத்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்திய கொடூர சம்பவம் தமிழகத்தையே பதற வைத்திருக்கிறது. இந்த சம்பவத்தில் அதே ஊரை சேர்ந்த அதிமுக-வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள், முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் ஈடுபட்டு உள்ளனர். 


90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுமி, உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி, அனைவரின் மனதை துடிதுடிக்கச்செய்யும்.


கோவை வேளாண் கல்லூரி மாணவியர் சுற்றுலா சென்ற பஸ்சை தர்மபுரியில் தீக்கிரையாக்கி மாணவியர் மூவரை கருக்கி கதறக் கதற கொன்றதற்கு காரணமானவர்கள் அ.தி.மு.க.வினர் சிலர். அதற்கு அடுத்த கொடிய சம்பவம் இது.


சிறுமியை இழந்து வாடும் ஜெயபால் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.  


குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக வழங்கப்படும் தண்டனையே இனி ஜெயஸ்ரீ போன்ற சிறுமிகளையும், பெண்களையும் காப்பாற்றும். 


பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் சம்பந்தப்பட்ட பலர் சட்டத்தின் பிடியில் இருந்து நழுவி உள்ள நிலையில், விழுப்புரத்திலும் அந்த நிலைமை ஏற்படக்கூடாது 


ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இதுபோன்ற கொடிய நிகழ்வுகள், மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பதை உணர்ந்து காவல் துறையினர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் சாய்ந்துவிடாமல், நடுநிலையோடு, சட்டத்தின் வலிமையை பயன்படுத்த வேண்டும்.


ஜெயஸ்ரீயின் கொடூர மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க தி.மு.க. துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.