திமுக ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் இம்மிளவும் கவலையில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
பாஜகவை எதிர்ப்பதால் திமுக ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் இம்மியளவும் கவலையில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவசேமாக தெரிவித்துள்ளார்.
திமுகவின் திட்டங்கள்
சென்னையில் திராவிட இயக்கப்பேச்சாளர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு செய்து கொண்டிருக்கும் மக்கள் நல திட்டங்களை பட்டியலிட்டார். " பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயண திட்டம், பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம், வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது. அண்ணா பிறந்த நாளில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இதனை சுமார் 1 கோடி பேர் பெற இருக்கிறார்கள்.
பிரதமர் மோடி மீது சாடல்
இதனையெல்லாம் பார்க்கும் ஒரு கூட்டத்துக்கு எரிச்சல் வந்துக் கொண்டிருக்கிறது. மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பாக தெரிவித்த ஒரு வாக்குறுதிகளையாவது நிறைவேற்றியிருக்கிறார்களா?. ஏதாவது ஒன்றையாவது அவர்களால் சொல்ல முடியுமா?. நான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணங்களையெல்லாம் மீட்டுக் கொண்டு வந்து நாட்டில் இருக்கும் மக்களுக்கு ஒரு நபருக்கு தலா 15 லட்சம் கொடுப்பதாக இன்றைய பிரதமர் மோடி சொன்னார். 15 லட்சம் வேண்டாம், 15 ஆயிரம் கொடுத்திருக்கிறாரா, அதுவும் வேண்டாம் 15 ரூபாயாவது கொடுத்திருக்கிறாரா?. இதைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறாரா. மாதம் 2 கோடி பேருக்கு வேலை தருவதாக சொன்னார். அதனையும் நிறைவேற்றவில்லை.
எதிர்க்கட்சிகளின் திட்டம்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், விவசாயிகள் டெல்லியில் ஆண்டுக் கணக்கில் போராடியபோதும் அதனை கண்டு காணமால் இருந்தார்கள். நூற்றுக்கணக்கானோர் இறந்தபோதும் கண்டுகொள்ளவில்லை டெல்லியில் ஆட்சியில் இருப்பவர்கள். இப்படிப்பட்ட மோசமான, சர்வாதிகார ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கே பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இதனையெல்லாம் உணர்ந்து தான் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து பாட்னாவில் சந்தித்து ஆலசோனை நடத்தியிருக்கிறோம். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதை மையமாக வைத்து கலந்துரையாடினோம்.
திமுகவுக்கு கவலையில்லை
எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் நடைபெற இருக்கிறது. இதனையெல்லாம் பார்த்து பிரதமர் மோடி எரிச்சலடைந்துள்ளார். அவர் பிரதமர் என்ற நிலையில் மறந்து ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார். அதனைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. பாஜகவை எதிர்ப்பதால் ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும், அதனைப் பற்றி நாம் இம்மியளவும் கவலைப்படக்கூடாது. லட்சியம், கொள்கை மட்டுமே நம்முடைய இலக்கு. அதனால் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | பத்திரப்பதிவில் சேவை கட்டணம் உயர்வு... ஜூலை 10 முதல் அமல் - மாற்றங்கள் என்னென்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ