பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாட அதிமுக அரசுக்கு என்ன தகுதி இருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில், முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜகண்ணப்பன், மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக.,-வில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஸ்டாலில் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.


விழாவில் பேசி அவர் மேலும் குறிப்பிடுகையில்., தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில் சுமார் ஒரு லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது 4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்த அரசு, அதிகளவில் கடன் மட்டுமே வாங்குகிறது. மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்றவில்லை. தமிழகத்தின் நிதிநிலைமை கோமாவில் கிடக்கிறது.



மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு பற்றி கூற பொள்ளாச்சி விவகாரம் ஒன்றே போதும். 


பொள்ளாச்சி மக்கள் தங்கள் ஊரின் பெயரை சொல்வதற்கே தற்போது வெட்கப்படுகின்றனர். ஆளும்கட்சி பேனர் விழுந்து சென்னையில் சுபஸ்ரீ உயிர் இழந்தார். கோவையில் அனுராதா காயமடைந்தார். இப்படியிருக்கையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாட அதிமுக அரசிற்கு என்ன தகுதி இருக்கிறது.  ஆக பெண் குழந்தைகள் குறித்து பேச அதிமுக அரசிற்கு எந்த தகுதியும் இல்லை.


பொள்ளாட்சியில் இளம்பெண்கள் பாதிக்கப்பட்ட விவகாரத்தை, யார் விட்டாலும் நான் விடமாட்டேன். ஆட்சிக்கு வந்தவுடன் அதில் தொடர்புடையவர்கள் அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். யாரையும் தப்பவிட மாட்டேன், கச்சேரியை வைத்துக்கொள்கிறேன், என ஆவேசமாக பேசினார் ஸ்டாலின்.


தொடர்ந்து பேசிய அவர்., பச்சைத்துண்டு போடுகிறவர்கள் எல்லோரும் விவசாயிகள் ஆகிவிட முடியாது. நானும் விவசாயி நானும் விவசாயி எனக் கூறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கைகளில் மண் கறை படிந்ததுண்டா. மாறாக ஊழல் கறைதான் படிந்திருக்கிறது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். திமுக தொடர்பான செய்திகளை சில ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கிறது. மத்திய அரசை தட்டிக்கேட்க துணிச்சல் இல்லாத ஆட்சியே அதிமுக ஆட்சி எனவும் விமர்சித்தார்.