சென்னை: இன்று சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், "நான் சரியாக வருமான வரி செலுத்துபவன். சட்ட விரோதமாக எந்த செயலும் செய்யவில்லை. சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு பிரச்னை என பீதி கிளப்பப்பட்டுள்ளது. சுய லாபத்திற்காக அரசியல் கட்சிகள் தூண்டிவிடுகின்றனர். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக மாணவர்கள் ஒரு போராட்டத்தில் இறங்குவதற்கு முன்பு யோசித்து முடிவெடுத்து இறங்க வேண்டும். இல்லையென்றால் அவர்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொள்வார்கள். யோசிக்காமல் முடிவெடுத்தால் மாணவர்களுக்குத்தான் பிரச்னை. ஏனென்றால்  எஃப்.ஐ.ஆர் போட்டார்கள் என்றால் மாணவர்களின் வாழ்க்கையையே முடிந்து போய்விடும் என்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் பேசிய அவர், NPR அவசியம் தேவை. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியும். இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் முதல் ஆளாக நானே எதிர்ப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.


இதற்கு பதிலடி கொடுத்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "ஈழத் தமிழர்க்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று நாங்கள் கேட்டபோதெல்லாம், இரட்டைக் குடியுரிமைக்கு வலியுறுத்தி வருகிறோம் என்று ஏமாற்றி வந்த அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எங்கே? அரசியல் சாசன பிரிவு 9-ன் படி யாருக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்க இயலாது என்று உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் சொல்லியிருப்பது தெரியுமா? உங்கள் பசப்பு நாடகத்தை முடிக்கப் போகிறீர்களா? அல்லது நடிப்பைத் தொடரப் போகிறீர்களா?


 



தாய்த் தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமையும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என்பது ஏமாற்று வேலை என்பதையும், இலங்கை அரசின் சட்டம் அதனை அங்கீகரிக்கவில்லை என்பதையும், இந்திய அரசும் அதனை ஏற்கவில்லை என்பதும் நாட்டு நடப்புகளை அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் மாணவர்களின் போராட்டம் இந்தியா முழுவதும் பரவியுள்ளது.


மாணவர்களை அரசியல் கட்சிகள் தூண்டிவிடுவதாக ஒலிக்கும் குரல்கள் புதிதல்ல. பழைய குரல்தான். இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின்போதும் ஆதிக்க மனப்பான்மையினர் அப்படித்தான் திரித்துச் சொல்லி, திசை திருப்பப் பார்த்தார்கள்.


இறுதியில், மொழிப்போரில் வென்றது தெளிவாகவும் திடமாகவும் இருந்த மாணவர்கள்தான். அதைப் போல தற்போது மாணவர்கள், பெண்கள், அறிஞர் பெருமக்கள், கலைஞர்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் ஜனநாயக முறையிலான அமைதியான அறவழிப் போராட்டங்களும் தனது இலக்கை அடைந்து, நிச்சயம் வெற்றி பெறும் என்று அவர் கூறியுள்ளார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.