முதல்வர் பழனிசாமியின் சுயபுராணத்தை வாசித்த ஆளுநர்: மு.க.ஸ்டாலின் அட்டாக்
ஆளுநர் வாசித்த உரையின் 56 பக்கங்களையும் பார்த்தேன். அது ஆளுநர் உரையல்ல, ஆளும்கட்சியின் உரை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆளுநர் வாசித்த உரையின் 56 பக்கங்களையும் திருப்பிப் பார்த்தேன். அதில் சொல்வதற்கு உருப்படியாக ஒன்றுமில்லை. அது ஆளுநர் உரையல்ல, ஆளும்கட்சியின் உரை என திமுக தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் கூடுவது வழக்கம். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் எனபதால், ஆளுநர் உரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும். அந்த வகையில் இன்று தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது முதல் நாள் என்பதால் சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். தமிழக அரசின் திட்டங்கள் குறித்து கவர்னர் விளக்கம் அளித்தார். மேலும் குடியுரிமை சட்டத்திருத்த சட்டம், ஆர் மற்றும் ஒரே நாடு, ஒரே ரேஷன்கார்டு போன்ற திட்டங்களை குறித்து பேசினார். அப்போது கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் வெளியே வந்து ஆளுநர் உரையை ஏன் புறக்கணித்தோம்? என்று விளக்கம் அளித்தார். அதாவது, தமிழகத்தின் கடன் 4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தொழில் வளர்ச்சி மற்றும் புதிய வேலைவாய்ப்பு இல்லை. பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, இதே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. மேலும் CAA சட்டத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது. அதனால் அந்த சட்டம் நிறைவேறியது. அதன்மூலம் சிறுபான்மை மற்றும் இலங்கை தமிழீழ மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர். இதனால் தான் வெளிநடப்பு செய்தோம் எனக் கூறியுள்ளார்.
அதன்பிறகு தனது சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில், "ஆளுநர் உரையின் 56பக்கத்தையும் திருப்பிப் பார்த்தேன். சொல்வதற்கு உருப்படியாக ஒன்றுமில்லை. எடப்பாடி பழனிசாமி எழுதிக் கொடுத்த சுயபுராணத்தை ஆளுநர் வாசித்திருக்கிறார். இது ஆளுநர் உரையல்ல, ஆளும்கட்சியின் உரை. நல்ல நகைச்சுவை உரை. பேரவையையும் நாடக மேடை ஆக்குவதை நிறுத்துங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.