ஸ்டாலினுக்கு அரசியல் அறமும், நாகரிகமும் வரவே வராது -GK மணி!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அரசியல் அறமும், நாகரிகமும் வரவே வராது என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அரசியல் அறமும், நாகரிகமும் வரவே வராது என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சில கட்சிகள் சாதி உணர்வை தூண்டிவிட்டதால் தான் திமுக தோல்வியடைந்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்யுரைத்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட மருத்துவர் அய்யா அவர்கள், விக்கிரவாண்டியிலும், நாங்குநேரியிலும் சாதி, மத உணர்வுகளைத் தூண்டி வெற்றி பெற மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிகளையெல்லாம் பட்டியலிட்டு மறுப்பு தெரிவித்ததுடன், இனி வரும் காலங்களிலாவது அறம் சார்ந்த அரசியல் செய்ய முன்வரும்படி அறிவுரை வழங்கியிருந்தார்.
மருத்துவர் அய்யா அவர்கள் வழங்கியிருந்த அறிவுரை மிகவும் நியாயமானது. மு.க.ஸ்டாலின் விரும்பினால் அதை ஏற்றுக் கொள்ளலாம்; விரும்பாவிட்டால் கடந்து போயிருக்கலாம்; இவற்றையெல்லாம் கடந்து ஸ்டாலின் அறம் விரும்பியாக இருந்திருந்தால், தம்மை நல்வழிப்படுத்தும் நோக்குடன் அறிவுரை வழங்கியதற்காக மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கலாம். ஆனால், இவை எதையும் செய்யாத ஸ்டாலின், மருத்துவர் அய்யா அவர்களுக்கு பஞ்சமி நில நாளிதழ் முரசொலி மூலம் பதிலளித்திருக்கிறார். முரசொலி மூலம் ஸ்டாலின் கூறியிருக்கும் அற்புதமான பதில் என்ன தெரியுமா? அறம் பற்றி அவரது தந்தை கலைஞர் பராசக்தி திரைப்படத்தின் நீதிமன்றக் காட்சிக்கு வசனம் எழுதியிருக்கிறாராம். ஆஹா... என்னவொரு சிறப்பான பதில். பராசக்தி வசனத்தில் அறம் பற்றி கலைஞர் கூறிவிட்டதால் அரசியலில் அதை கடைபிடிக்க தேவையில்லையா? இப்படி ஒரு எதிர்க்கட்சித் தலைவரை பெறுவதற்கு தமிழக மக்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும்? ஆனால், மருத்துவர் அய்யா அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு இது பதில் இல்லையே ஸ்டாலின் அவர்களே!
அறம் குறித்த விளக்கம் மு.க.ஸ்டாலினின் அறியாமையைக் காட்டினால், அதற்கு பிறகு வரும் பகுதிகள் தான் அவரது உண்மை சொரூபத்தையும், உள்ளக்கிடக்கையையும் காட்டுகின்றன. மருத்துவர் அய்யா அவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுகவுடனும், திமுகவுடனும் மாறி மாறி கூட்டணி அமைத்து அரசியல் வியாபாரம் செய்து வருகிறாராம். அரசியல் விஞ்ஞானி மு.க. ஸ்டாலின் கண்டுபிடித்துக் கூறியிருக்கிறார். அரசியலில் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியும் மேற்கொள்ளும் நிலைப்பாட்டுக்கு ஏற்ற வகையில் அணி மாற்றம் நடப்பது வழக்கம். அரசியலில் நுழைந்த குழந்தைக்குக் கூட இது தெரியும். ஆனால், ஸ்டாலினுக்கு இந்த உண்மை தெரியவில்லை. இதில் வியப்படைவதற்கு எதுவும் இல்லை. அவருக்கு தெரிந்தது அவ்வளவு தான்.
இதே இலக்கணத்தை திமுகவுக்கு பொருத்திப் பார்க்க மு.க.ஸ்டாலின் தயாரா?
* 1949-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1957 முதல் இன்று வரை 23 பொதுத் தேர்தல்களை திமுக சந்தித்து இருக்கிறது. இவற்றில் ஒரு தேர்தலிலாவது கூட்டணி இல்லாமல் போட்டியிட்டிருக்கிறதா அல்லது 23 தேர்தல்களிலும் ஒரே கட்சியுடன் நிலையான கூட்டணி அமைத்திருக்கிறதா? திமுகவின் கூட்டணி தாவல்களை பட்டியலிட வேண்டுமானால் அறிக்கை போதாது.... தொடர்கதை தான் எழுத வேண்டும்.
* திமுக என்ற இயக்கமே காங்கிரசுக்கு எதிராகத் தான் தொடங்கப்பட்டது. நெருக்கடி நிலை காலத்திற்குப் பிறகு தமிழகத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி அவர்களை கொலை செய்ய திமுக குண்டர்கள் தாக்குதல் நடத்தவில்லையா? அத்தாக்குதலில் பழ.நெடுமாறன் அவர்களின் மண்டை உடைந்து, அதிலிருந்து வழிந்த ரத்தம் இந்திரா காந்தியின் புடவையில் படிந்திருந்ததை திமுக தலைமை அருவருக்கத்தக்க வார்த்தைகளில் கொச்சைப்படுத்தவில்லையா? பின்னர் அதே காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, அதை வீரவசனம் பேசி சமாளிக்கவில்லையா?
* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்த பெரியவர் சங்கரய்யா அவர்களின் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அவர் இருக்கும் வரை அந்தக் கட்சியுடன் திமுக கூட்டணி அமைக்காது என்று கூறி விட்டு, பின்னர் அதை காற்றில் பறக்கவிடவில்லையா?
* பாரதிய ஜனதா பண்டாரங்களின் கட்சி, விஷ மரம் என்று விமர்சனம் செய்து விட்டு, 1999-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அதிமுக விலகிய அடுத்த நிமிடமே, அந்த அணியில் திமுக வந்து ஒட்டிக் கொள்ளவில்லையா?
* இந்த அரசியல் வியாபாரங்களின் மூலம் திமுக அடைந்த பயன்களை கணக்கிட்டால் கால்குலேட்டருக்கே காய்ச்சல் வந்து விடுமே!
* அவ்வளவு ஏன் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக செய்த தேர்தல் கூட்டணி வியாபாரத்திற்கு தேர்தல் ஆணையத்தில் ஸ்டாலின் கையெழுத்திட்டு தாக்கல் செய்த வரவு & செலவு கணக்கே சாட்சியமாக இருக்கிறதே!
அடுத்ததாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு சட்டப்பேரவையிலும் உறுப்பினர் இல்லை; நாடாளுமன்றத்திலும் உறுப்பினர் இல்லை. அதிமுக போட்ட பிச்சையைப் பெற்று மகனை மாநிலங்களவை உறுப்பினராக்கி, அவருக்கு அமைச்சர் பதவியை மருத்துவர் அய்யா அவர்கள் கேட்பதாக ஸ்டாலினின் குரலை முரசொலி ஒலித்திருக்கிறது. ஸ்டாலின் எந்தக் காலத்திலும் திருந்த மாட்டார்; அரசியல் நாகரிகம் அவருக்கு சுட்டுப்போட்டாலும் வராது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் தேவையில்லை.
சட்டப்பேரவையிலும், மக்களவையிலும் உறுப்பினர்கள் இல்லாமல் இருப்பது தகுதிக் குறைவு இல்லை. மாறாக ஓர் அரசியல் கட்சி நேர்மையாக இருப்பது தான் முக்கியம். அந்த நேர்மை பா.ம.க.விடம் இருக்கிறது. மக்களவையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உறுப்பினர் இல்லை என்று கூறும் திமுகவுக்கு 1989, 1991, 2014-ஆம் ஆண்டுகளில் எத்தனை உறுப்பினர்கள் இருந்தார்கள்? தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த திமுகவுக்கு 1991-ல் எத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தார்கள்? மு.க.ஸ்டாலின் விளக்குவாரா?
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே அதிமுகவுடன் செய்து கொள்ளப்பட்ட கூட்டணி ஒப்பந்தத்தின்படி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கூட்டணி மூலம் கிடைக்கும் பதவிகள் எல்லாம் பிச்சை என்றால், 2006-ஆம் ஆண்டில் பெரும்பான்மை பெறாத திமுகவுக்கு கிடைத்த ஆட்சி நாற்காலி பா.ம.க. போட்ட பிச்சை, 2009-ஆம் ஆண்டில் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த துணை முதலமைச்சர் பதவி பா.ம.க. போட்ட பிச்சை, 2006-11 காலத்தில் திமுகவினர் வகித்த அமைச்சர் பதவிகள் அனைத்தும் பா.ம.க. போட்ட பிச்சை, 2007, 2008, 2010 மாநிலங்களவைத் தேர்தல்களில் திமுகவுக்கு கிடைத்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் அனைத்தும் பா.ம.க. போட்ட பிச்சை என்பதை ஸ்டாலினும், அவரது குரலை தன் குரலாக எதிரொலித்த முரசொலியும் ஒப்புக்கொள்வர் என நம்புகிறேன்.
அவ்வளவு ஏன்... 2013-ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலினின் தங்கை கனிமொழிக்காக பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்களின் வாக்குகளைக் கேட்டு, துரைமுருகன், ஜெகத்ரட்சகன் ஆகியோருடன் மு.க.ஸ்டாலின் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் இல்லத்திற்கு சென்று ஆதரவு பிச்சைக் கேட்டது நினைவில் இல்லையா?
பிரதமரை சந்திப்பதே அமைச்சர் பதவி கோருவதற்காகத் தான் என்பது திமுக வகுத்த இலக்கணம். பாட்டாளி மக்கள் கட்சிக்கு அந்த வழக்கம் இல்லை. ஆனால், 2009-ஆம் ஆண்டில் இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது, அதற்காக இரங்கல் கூட தெரிவிக்காமல் தில்லியில் முகாமிட்டு பதவிப் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்கள் யார்? என்பதை தமிழக மக்கள் அறிவர்.
ஆனால், ஒன்று மட்டும் உறுதி.... தமிழக அரசியலில் எத்தகைய மாற்றங்கள் வேண்டுமானாலும் நிகழும். மு.க. ஸ்டாலினுக்கு மட்டும் அரசியல் அறமும், நாகரிகமும் வரவே வராது. ம்கூம்... அவர் திருந்த மாட்டார் என குறிப்பிட்டுள்ளார்.