கீழடி!! இந்திய வராலற்றை, இனி தமிழகத்திலிருந்துதான் பார்க்க வேண்டும்: ஸ்டாலின்
இதுவரை சாக்கு போக்கு சொல்லி வந்தவர்கள், இனியாவது தமிழ் மொழி தொன்மையானது என்பதை உணர்வார்கள் ஸ்டாலின் அறிக்கை.
சென்னை: கீழடி ஆய்வறிக்கையை அரசு வெளியிட்டதை வரவேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இந்திய வராலற்றை, இனி தமிழகத்திலிருந்துதான் பார்க்க வேண்டும் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது என்பதையும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார். அதுக்குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது மற்றும், கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்று மதுரை அருகே கீழடியில் நடத்தப்பட்ட 4 ஆம் கட்ட ஆய்வில் வெளிவந்திருப்பது தமிழர்களுக்கும், தமிழ்மொழிக்கும் பெருமை சேர்த்திருகிறது. தமிழர்களின் நாகரிகம் பெரும் பழமையான நாகரிகம் என்பதற்கு அசைக்க முடியாத சான்றுகள் கிடைத்திருப்பது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமித உணர்வை தந்துள்ளது. இதுவரை சாக்கு போக்கு சொல்லி வந்தவர்கள், இனியாவது தமிழ் மொழி தொன்மையானது என்பதை உணர்வார்கள் என்று கருதுகிறோம் என தனது அறிக்கையில் கூறியுள்ளார். தனது அறிக்கையை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தும் உள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதற்கான வரலாற்றுச் சான்றான கீழடி ஆய்வறிக்கையை அரசு வெளியிட்டதை வரவேற்கிறேன். இந்திய வராலற்றை, இனி தமிழகத்திலிருந்துதான் பார்க்க வேண்டும் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது.
தமிழர் நாகரிகம் "முற்பட்ட நாகரிகம்" என்பதை உணர்த்தும் கீழடி அகழ்வாய்விடம் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட வேண்டும். சர்வதேசத் தரத்தில் அருங்காட்சியகம், மதுரையை தலைமையிடமாகக் கொண்ட தொல்லியல் அலுவலகம் போன்ற கோரிக்கைகளை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.