பெண்ணையாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சினையிலும் தொடர்ந்து சட்ட போராட்டம் மூலம் தமிழகத்தின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: தென் பெண்ணையாறு நதிநீர் பிரச்னையில் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தப்படும் என்றும், பெண்ணையாறு விவகாரத்தில் சட்டப் போராட்ட மூலம் தமிழக உரிமைகள் நிலைநாட்டப்படும் எனவும், பெண்ணையாறு குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கைக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.


பெண்ணையாறு விவகாரம் தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்த புகாருக்கு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், நதிநீர் பங்கீட்டு உரிமைகளில் அதிமுக அரசு அக்கறை காட்டுவதில்லை என துரைமுருகன் குறை கூறியிருப்பது விந்தையாக இருப்பதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தென்பெண்ணையாறு விவகாரத்தில், கர்நாடக அரசிடமிருந்தும், மத்திய அரசிடமிருந்தும் சாதகமான பதில் வரப்பெறாத நிலையில், இயற்கையாக ஓடுகின்ற நீரை கர்நாடக அரசு தடுத்து நிறுத்த கூடாது என உத்தரவிடுமாறு, கடந்தாண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்திருப்பதை, அமைச்சர் ஜெயக்குமார் சுட்டிக்காட்டியிருக்கிறார்.


மார்க்கண்டேய நதியில் கர்நாடக அரசு மேற்கொள்ளும் அணை கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில், கடந்த ஜூலை மாதம் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இடைக்கால மனுவை மட்டுமே உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதையும், அசல் வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதையும் அறியாமல், அரசியல் காரணங்களுக்காக துரைமுருகன் கூறுவதை மக்கள் நன்கறிவார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.


காவிரி நதிநீர் பிரச்சனையில் திமுக இழைத்த தவறுகளை மறைக்கவே, உண்மைக்குப் புறம்பான தகவல்களை துரைமுருகன் கூறிவருவதாகவும், அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியிருக்கிறார்.