ஸ்டாலின் தலைமையில் இன்று உண்ணாவிரத போராட்டம்
சட்டசபையில் திமுகவினர் தாக்கப்பட்டது தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
முதல்வர் எடப்பாடி பெரும்பான்மை நிரூபிக்க சட்டசபை கூடியதும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். மதியம் அவை மீண்டும் கூடியதும், தொடர்ந்து சபையில் தர்ணா போராட்டம் 20 தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். சட்டசபையில் இருந்து வெளியேற மறுத்த ஸ்டாலினை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதனையடுத்து, அவைக்காவலர்கள் ஸ்டாலின், துரை முருகன் உள்ளிட்ட நபர்களை குண்டுகட்டாக தூக்கி அவையில் இருந்து வெளியேற்றினர். அப்போது ஏற்பட்ட அமளியில் ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது.
பிறகு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய பரபரப்பான சூழலுக்கிடையே திமுக எம்எல்ஏ-க்களுடன் அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் திமுகவினர் மீது தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் பேரவை நிகழ்வுகளை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரத போராட்டம் நடத்தயிருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெறும் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை ஏற்கிறார். இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் உண்ணாநிலைப் போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.
திமுக நடத்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாணவர்கள், இளைஞர்கள், இயக்கங்கள், இதர கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது.
ஆளும் கட்சியை எதிர்த்து போராட்டம் நடத்துவதால் காவல்துறை நமக்கு போதிய பாதுகாப்பு வழங்காது. அதனால் கட்சியில் உள்ள தொண்டரணியினர் பாதுகாப்பு பணிகளை செய்ய வேண்டும் என்றும் திமுக தலைமைகள் அந்தந்த மாவட்டங்களில் உத்தரவிட்டுள்ளது.