முகிலனை வெளிக்கொண்டு வர நடவடிக்கை தேவை - கனிமொழி!
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்!
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்!
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன், கடந்த ஒரு வார காலமாக காணவில்லை; ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான போராட்டக் காலத்தில் நிகழ்ந்த வன்முறைகள் குறித்த ஆதாரத் தொகுப்புகளை கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் வெளியிட்ட முகிலன், அன்று இரவு முதல் காணமல் போனார்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் சூழல் ஆர்வலருமான முகிலன், கடந்த பிப்ரவரி 15-ஆம் நாள் சென்னையில் “கொளுத்தியது யார்?- ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள்” என்ற தலைப்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக அறிக்கை வெளியிட்டார்.
அன்று மாலை இறுதியாக நண்பர்கள் அவரை எழும்பூர் ரயில் நிலையத்தில் சந்தித்துள்ளனர். அதன் பின்னர் முகிலன் குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை.
முகிலன் காணமல்போனதை அடுத்து அவரது நண்பர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் சட்டப்பூர்வமாகப் புகார் அளித்தும் வழக்குத் தொடுத்தும் உள்ளனர். எனினும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் இன்று மாநிலங்களவை எம்.பி. கனிமொழி முகிலனை வெளிக்கொண்டு வர சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...
“சூழலியலாளர் தோழர் முகிலன் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு 'திட்டமிட்ட அரசின் சதி' என்பதை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்ட பின்னர், கடந்த ஒரு வாரமாக காணவில்லை. விரைவில் அவரை வெளிக்கொண்டுவர காவல்துறை துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.