அதிமுக MP-க்கு உத்தரவிடுவது பாஜக-வா அல்லது அதிமுக-வா என திமுக MLA துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடியுரிமை மசோதாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக MP எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு தலைமைச் செயலக துணைச் செயலாளர் பேசியது, முதலமைச்சரின் உத்தரவிலா அல்லது பாஜக அரசின் கட்டளையா? என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,  மூத்த அரசியல்வாதியும், அ.தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் அவர்கள், "குடியுரிமை மசோதா குறித்து அ.தி.மு.க. அலுவலகத்தில் விவாதித்துக் கொண்டிருந்த போது, தலைமைச் செயலகத்திலிருந்து துணைச் செயலாளர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அந்த மசோதாவை மாநிலங்களவையில் ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று கூறியதாக" தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.


அ.தி.மு.க. ஆட்சியில் தலைமைச் செயலகம், எப்படி அரசியல்மயமாகியுள்ளது என்பதற்கும், அரசு அதிகாரிகள் ஆளுங்கட்சிப் பணியில் எப்படி தங்களது தரத்தைத் தாழ்த்திக் கொண்டு ஈடுபடுகிறார்கள் என்பதற்கும், இந்த நிகழ்வும் ஒரு உதாரணம்.


ஒரு மசோதாவில் வாக்களிப்பது அல்லது எதிர்த்து வாக்களிப்பது என்பது, அ.தி.மு.க. தலைமை எடுக்க வேண்டிய கொள்கை முடிவு. அதை அ.தி.மு.க., தனது கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து, ஒருவர் மூலம் தெரிவிக்கலாமே தவிர, தலைமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலாளர் ஒருவர் மூலம் திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் போன்ற அனுபவமிக்க மாநிலங்களவை உறுப்பினரிடமே இப்படித் தெரிவித்திருப்பது, மிகுந்த வேதனை தருகிறது.


எஸ்.ஆர்.பி. அவர்களுக்கே இந்த நிலைமை என்றால், அ.தி.மு.க.வில் உள்ள மற்ற மாநிலங்களவை உறுப்பினர்கள், இந்த மசோதாவில் யாருடைய நிர்பந்தத்திற்குப் பணிந்து வாக்களித்துள்ளார்கள் என்பதை யூகிக்க முடிகிறது.


சிறுபான்மையின மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் எதிரான இந்தக் குடியுரிமை மசோதாவில் வாக்களிப்பது குறித்த அ.தி.மு.க.வின் முடிவை, ஒரு அரசு துணைச் செயலாளர் எடுக்கிறார் என்றால், அ.தி.மு.க., அதன் தலைமையின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறதா? அல்லது மத்திய பா.ஜ.க. அரசின் ஏஜெண்டுகளாக தலைமைச் செயலகத்தில் அமர வைக்கப்பட்டிருக்கும் ஒரு சில அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறதா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.


மாநிலங்களவை உறுப்பினருக்கே உத்தரவிடும் அதிகாரம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் அந்தத் துணைச் செயலாளருக்குக் கொடுக்கப்பட்டதா? அல்லது, நேரடியாக மத்திய பா.ஜ.க. அரசில் இருந்து வந்த நிர்பந்தத்தால் தலைமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலாளர், இப்படியொரு உத்தரவைப் பிறப்பித்தாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


ஆகவே, அரசியல் பணிகளுக்காக, குறிப்பாக, அ.தி.மு.க.வின் கட்சிப் பணிக்காக தலைமைச் செயலகம் பயன்படுவதும், அங்குள்ள அதிகாரிகள் அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அரசியல் உத்தரவு போடுவது போன்ற கட்சிப் பணிகளில் ஈடுபடுவதும் கடும் கண்டனத்திற்குரியது.


இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளை தமிழக தலைமைச் செயலாளர் அவர்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


அந்தக் குறிப்பிட்ட துணைச் செயலாளர், முதலமைச்சரின் உத்தரவிற்குக் கட்டுப்பட்டு எஸ்.ஆர்.பி அவர்களிடம் பேசினாரா அல்லது நேரடியாக மத்திய பா.ஜ.க. அரசின் கட்டளையை ஏற்று அப்படிப் பேசினாரா என்பதை நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் விளக்கிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.