மானமில்லாத ADMK ஆட்சி மான நஷ்ட வழக்கு போடுகிறது: ஸ்டாலின் காட்டம்....
ADMK மீண்டும் தேர்தலில் வெற்றி பெறாது என்பதால் அனைத்தையும் சுருட்ட நினைக்கிறார்கள் என ஸ்டாலின் காட்டம்...
ADMK மீண்டும் தேர்தலில் வெற்றி பெறாது என்பதால் அனைத்தையும் சுருட்ட நினைக்கிறார்கள் என ஸ்டாலின் காட்டம்...
தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது DMK அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையடுத்து, DMK தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், CBI விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகாரை CBI விசாரிக்க இடைக்கால தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நாகை மாவட்டம் திருக்கடையூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "உள்ளாட்சி தேர்தலை நிறுத்த DMK நீதிமனறத்துக்கு செல்லவில்லை. தற்போது நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பால் DMK-க்கு எந்த பயனும் இல்லை. ADMK ஆட்சி மீண்டும் தேர்தலில் வெற்றி பெறாது என்பதால் தான் அவர்கள் தற்போதே அனைத்தையும் சுருட்டிக் கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் DMK ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் அனைவருக்கும் சிறை தான். முதல்வர் மீது CBI விசாரணை தேவை என்று நீதிமன்றம் கூறுவது இது தான் முதல் முறை. கிருமிகள் எல்லாம் கிரிமினல்களாக மாறி தமிழகத்தில் ஆட்சி செய்கின்றனர்; அகற்றத் தயாராவோம். மானமில்லாத ADMK ஆட்சி மான நஷ்ட வழக்குகள் போடுகிறது" என்றார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த 7 அவதூறு வழக்குகள் ஸ்டாலின் மீது போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.