திமுக எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை!
சென்னையில் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது. சட்டப்பேரவை கூட்டப்பட்டால் செயல்படும் விதம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தமிழக ஆளுநர் உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே திமுகவினர் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று நேற்று திடிரென்று 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்து இருப்பதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றுமூத்த வக்கீல்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க விவகாரத்தில் எடப்பாடி அரசை காப்பாற்ற தவறான வழியில் சென்று சபாநாயகர் பதவிக்குரிய மாண்பை கெடுத்துவிட்டார். பேரவையை சந்தித்து வெற்றி பெற முடியாத நிலையை தகுதி நீக்க நடவடிக்கை காட்டுகிறது என ஸ்டாலின் குற்றம்சாட்டி இருந்தார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனிடையே குட்கா விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்கள் மீதும் இதேபோன்ற நடவடிக்கையை சபாநாயகர் எடுப்பாரோ என்ற ஐயம், திமுக வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. மேலும், அடுத்தகட்டமாக திமுக எடுக்கவேண்டிய நிலை என்ன என்பது குறித்தும் திமுக ஆலோசிக்க திட்டமிட்டு எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அக்கட்சி தலைமை அழைப்புவிடுத்துள்ளது.
இன்று மாலை 5 மணியளவில் அறிவாலயத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள திமுக எம்எல்ஏக்கள் சென்னைக்கு விரையும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.