பொள்ளாச்சி கொடூர சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்திய கனிமொழி கைது
திட்டமிட்டப்படி திமுக சார்பில் பொள்ளாச்சியில் போராட்டத்தை தொடங்கிய எம்.பி. கனிமொழி.
18:02 12-03-2019
பொள்ளாச்சி கொடூர சம்பவத்தை கண்டித்து தடையை மீறி போராட்டம் நடத்திய எம்.பி. கனிமொழி கைது செய்யப்பட்டார். போராட்டம் நடத்திய திமுக, அதன் தோழமை கட்சிகள் மற்றும் மாதர் சங்கத்தினர் என அனைவரையும் கைது செய்தது காவல் துறை.
17:52 12-03-2019
பொள்ளாச்சியில் தடையை மீறி தி.மு.க. தலைமையில் போராட்டம் தொடங்கிய கனிமொழி.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என கனிமொழி கூறியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களின் முழு விவரத்தை வெளியிட்ட காவல்துறைக்கும் கண்டனத்தை பதிவு செய்தார்.
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து இன்று திமுக சார்பில் கண்டன போராட்டம் நடைபெறும் என்று எம்.பி. கனிமொழி தெரிவித்திருந்தார். ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், போராட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என்று மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
இதுக்குறித்து பேசிய கனிமொழி, மாவட்ட நிர்வாகம் அனுமதிக்காவிட்டாலும் திட்டமிட்டப்படி பொள்ளாச்சியில் போராட்டம் நடக்கும். அனைவருக்கும் நீதி, நியாயம் கிடைக்க வேண்டும். இந்த கொடூரமான சம்பவத்திற்கு பின்னால் அதிமுக இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் போலீசார் நடவடிக்கை எடுக்க பயப்படுகிறார்கள்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். உண்மை வெளிவர வேண்டும். இதனால் திமுக சார்பில் போராட்டம் கண்டிப்பாக நடைபெறும். தடையை மீறி நாங்கள் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு கனிமொழி கூறினார்.
ஏற்கனவே பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.