சிலைகளை கணக்கெடுத்து ஆவணப்படுத்த நடவடிக்கை தேவை -கனிமொழி!
தமிழ்நாட்டு கோவில்களில் உள்ள பழங்கால சிலைகள் மற்றும் கலைப் பொருட்களை முழுமையாக பதிவு செய்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டு கோவில்களில் உள்ள பழங்கால சிலைகள் மற்றும் கலைப் பொருட்களை முழுமையாக பதிவு செய்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய கனிமொழி அவர்கள் தமிழகத்தில் கோவில்களில் பழமையான சிலைகள் பழம்பெருமை மிக்க கலைப்பொருட்கள் அதிக அளவில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
எனினும் எந்தெந்த கோவில்களில் என்னென்ன பழங்கால சிலைகள் உள்ளன என்பதற்கு முறையான முழுமையான பதிவுகளோ ஆவணங்களோ இல்லை எனவும் குறிப்பிட்டார்.
கனிமொழியின் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் பட்டேல், கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து 33 பழங்கால சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் 40 பழம்பொருட்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதில் பெரும்பாலானவை தமிழகத்தை சேர்ந்தவை என்றும் அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் அருங்காட்சியகங்களில் உள்ள இந்திய கலைப்பொருட்கள் ஆபரணங்கள் குறித்த தகவல் இந்திய தொல்லியல் துறை வசம் இல்லை என்றும், அதேசமயம் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரங்கள் மூலம் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் உள்ள பழங்கால சிலைகளைப் பொறுத்தவரை அதுகுறித்து தகவல்களை மாநில அரசு திரட்ட முடியும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.