சந்திரசேகர ராவ் - ஸ்டாலின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது: திமுக அறிக்கை
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மரியாதை நிமித்தமாக தான் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக திமுக அறிக்கை.
சென்னை: இன்று ஆழ்வார்ப்பேட்டையில் அமைத்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, அவரது இல்லத்தில் தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசினார்.
தனது இல்லத்திற்கு வந்த கே.சந்திரசேகர் ராவை வரவேற்றார். அவருக்கு முன்னால் முதல்வர் கருணாநிதியின் உருவம் பொறித்த சிலையை வழங்கினார். பின்னர் இருவரும் ஆலோசனை நடத்தினார்கள். இந்த சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்றது. ஆனால் சந்திரசேகரராவ் அல்லது ஸ்டாலின் ஆகிய இருவரில் ஒருவர் கூட செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பில் அரசியல் குறித்து பேசி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.
ஆனால் திமுக தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மரியாதை நிமித்தமாக தான் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தேர்தல் முடிவுக்கு கிட்டத்தட்ட 10 நாட்கள் உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது.
2019 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைப்பெற்று வருகிறது. தற்போது வரையில் ஆறு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. 7-ஆம் கட்ட தேர்தல் வரும் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறுகிறது.