திமுக கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதாக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. இதில் பல முக்கிய முடிவுகள், நிர்வாகிகள் மாற்றம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்ட வேண்டும். அந்த வகையில் கடந்தாண்டு 2017-ம் ஆண்டு திமுக கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தாண்டுக்கான திமுக கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இதுவரை நடைபெறவில்லை. இந்நிலையில் ஆகஸ்ட் 19-ம் தேதி பொதுக்குழுவை திமுக கூட்டுகிறது. 


பொதுவாக பொதுக்குழு கூட்டமானது திமுக கட்சி அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடப்பது வழக்கம். ஆனால், இம்முறை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. 


இந்த பொதுக்குழுக் கூட்டம் திமுக எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என 4,000 பேர் கலந்துகொள்ள உள்ளனர். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு முக்கிய முடிவுகளும், நிர்வாகிகள் மாற்றமும் நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.