அ.தி.மு.கவுடனோ அல்லது வேறு எந்த வழியிலோ தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பா.ஜ.க.வை ஒரு போதும் திமுக அனுமதிக்காது. தக்க பாடம் புகட்டுவார்கள் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதைக்குறித்து அவர் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


தமிழ்நாட்டின் நலன்களை ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு. 


நீட் தேர்வை வம்படியாக அறிமுகப்படுத்தி, தமிழ்நாடு சட்டமன்றம் அனுப்பிய நீட் மசோதோக்களுக்கும் குடியரசுத் தலைவர் அனுமதி பெறாமல் அலைக்கழித்து, தமிழில் நீட் தேர்வு எழுதிய ஒரே "பாவத்திற்காக" தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி, அநீதி இழைத்துள்ளது மத்திய பா.ஜ.க. அரசு.


உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் தங்களின் அரசியல் காரணங்களுக்காக வரலாறு காணாத தாமதத்தை உருவாக்கியதும், 15 ஆவது நிதி ஆணையத்தின் மூலம் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய நிதிப் பங்கீட்டையே அடியோடு குறைக்கும் முயற்சியில் இறங்கி, உயர் கல்வி ஆணையத்தை அமைத்து மாநில உரிமைகளைப் பறிக்க முற்படுவதோடு மட்டுமின்றி உயர்கல்வியில் சமூக நீதியைச் சீர்குலைக்கும் இழிவான முயற்சியிலும் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபட்டுள்ளது.


அணை பாதுகாப்புச் சட்டம் என்று கூறி மாநிலத்தில் உள்ள அணைகளின் கட்டுப்பாட்டைக் கூட எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறது. ஒட்டு மொத்தமாக மாநிலத்தின் அதிகாரங்களை அப்படியே அபகரித்து சர்வாதிகார முறையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.


தமிழகத்திற்கு எந்தவொரு முக்கியத் திட்டங்களுக்கோ, நதி நீர் இணைப்புத் திட்டங்களுக்கோ, அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கோ நிதி ஒதுக்கீடு செய்ய வில்லை. வர்தா புயல், சென்னைப் பெருவெள்ளம், ஒக்கி புயல் என்று கேட்ட எந்த நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை. மாநிலத்தில் செயல் படுத்தப்படும் மத்திய திட்டங்கள் மற்றும் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியது உள்ளிட்டவற்றில் 19 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நிதியை மத்திய அரசு இன்னும் கொடுக்கவில்லை.


நாட்டின் ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும், மாநில சுயாட்சிக் கொள்கைகளுக்கும் முற்றிலும் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க அரசை எதிர்க்க முதுகெலும்பின்றி, வருமான வரித்துறை சோதனையில் மிரண்டு, நடுங்கி பா.ஜ.க.விடம் மண்டியிட்டு, தமிழ்நாட்டின் சுயமரியாதையை மொத்தமாக அடகு வைத்திருக்கும் அ.தி.மு.கவை தமிழக மக்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்திருக்கிறார்கள்.


தமிழகத்தைப் பொறுத்தவரை மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான அ.தி.மு.க முழுக்க முழுக்க பா.ஜ.க.வின் பினாமி கம்பெனியாகச் செயல்படுகிறது என்பது தற்போது நூற்றுக்கு நூறு சதவீதம் நிரூபிக்கப்பட்டுள்ளது. “பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க” இடையே உள்ள மர்மக்கூட்டணியும் அம்பலமாகி விட்டது.


இதுவரை தமிழ்நாட்டு நலன்களை வஞ்சிப்பதில் அ.தி.மு.க - பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் கைகோர்த்துச் செய்த துரோகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


ஊழல் அ.தி.மு.கவுடனோ வேறு எந்த வழியிலோ தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பா.ஜ.க.வை ஒரு போதும் திராவிட முன்னேற்றக் கழகம் அனுமதிக்காது; எப்போது தேர்தல் வந்தாலும் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.