மக்கள் அச்சப்பட வேண்டாம் - தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: வேலுமணி
தண்ணீர் குறித்து பொதுமக்கள் எந்தவித அச்சமும் பட வேண்டாம். தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்துங்கள் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை: சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், மக்கள் தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்துங்கள் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. குறிப்பாக சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன.
சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், பல இடங்களில் ஹோட்டல்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.
இந்தநிலையில், இன்று தண்ணீர் தட்டுப்பாட்டு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி கூறியது, குடிநீர் பிரச்னையை தீர்க்க அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க என்ற அடிப்படையில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார். மழைப் பொழிவு இல்லாததால் கடும் வறட்சி நிலவி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் குறித்து பொதுமக்கள் எந்தவித அச்சமும் பட வேண்டாம். தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்துங்கள் எனக் கூறினார்.