நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியில் இடம்பெற முடியாத யாரும் விபரீத முடிவினை எடுத்திட வேண்டாமென்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-


"நீட் தேர்வு எத்தகைய கொடுமையானது என்பதற்கு இளம் மாணவி அனிதாவின் தற்கொலை இன்று ரத்த சாட்சியாகி இருக்கிறது. பிளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றதுடன், கட் ஆஃப் மதிப்பெண்ணாக 196.5 பெற்றிருந்தவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி அனிதா. எளிய குடும்பத்தைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட சமுதாயத்து மாணவியான அனிதா பெற்ற மதிப்பெண்ணுக்கு, தமிழகத்தில் வழக்கமாக நடைபெறும் முறையிலான பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்திருந்தால், நிச்சயமாக அவருக்கு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்திருக்கும்.


ஆனால், இரண்டாண்டுகள் அவர் கவனம் செலுத்திப் படித்து, எடுத்த மதிப்பெண்களை செல்லாததாக்கி, நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவ சீட் என்ற நிலைப்பாட்டின் காரணமாக, அனிதாவின் மருத்துவக் கனவு தகர்ந்து, அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி, இன்றைக்கு தற்கொலை செய்து தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.


தமிழகத்தின் கிராமப்புற ஏழை மாணவர்களும், அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும், மருத்துவ - பொறியியல் கல்வியைக் கற்க வேண்டும் என்பதற்காகத்தான் தி.மு.கழக ஆட்சியில் நுழைவுத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வெளிப்படையான கலந்தாய்வு நடைபெற்றது. இதன் காரணமாக, கிராமங்கள் தோறும் மருத்துவர்கள் உருவானார்கள். தமிழக மாணவர்களின் முன்னேற்றத்திற்கும், சமூகநீதிக் கொள்கைக்கும் வேட்டுவைக்க வேண்டுமென்றே நீட் தேர்வினை மத்திய அரசு எதேச்சாதிகாரமாக புகுத்தியது.


கழக அரசு இருந்தபோது, இந்த நீட் தேர்வை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, பிறகு அந்த வழக்கு உச்சநீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு, “நீட் தேர்வு செல்லாது”, என்று தீர்ப்பளிக்கப்பட்டு, தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுவது, தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தவரை தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போது நீட் தேர்வு செல்லாது என்றுத் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. அல்டாமஸ் கபீர் அவர்கள், “கல்வியில் கிராமப்புற மாணவர்கள் பின்தங்கி இருக்கிறார்கள். திறமை என்ற அடிப்படையில் நீட் தேர்வை கொண்டு வருவது கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்ப்புற மாணவர்களுக்கும் மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தும்”, என்று தொலைநோக்குடன் சுட்டிக்காட்டிய உண்மையை, இன்று மாணவி அனிதாவின் மரணம் நினைவுபடுத்தி இருக்கிறது.


ஆனால், அதிமுக அரசு பதவியேற்று, குறிப்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அமைந்த ‘குதிரை பேர’ பினாமி அதிமுக அரசு, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசுக்கு வால் பிடித்து, கொடி பிடித்து நீட் தேர்வைக் கொண்டு வந்து, மாணவர்களை ஈவு இரக்கமின்றி வஞ்சித்து விட்டது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக் கோரும் சட்டமன்றத்தின் ஒருமனதான மசோதாக்களை மத்திய பா.ஜ.க. அரசு புறக்கணித்துவிட்டது. மாநில சட்டமன்றத்தின் உணர்வுகளை முடக்கி வைத்து, அந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் பார்வைக்கே அனுப்பாமல் கிடப்பில் போட்டது.


பிறகு கடைசி நேரத்தில், “மாநில அரசு ஒரு வருடத்திற்கு மட்டும் விலக்கு அளித்து அவசரச் சட்டம் கொண்டு வந்தால் பரிசீலிப்போம்”, என்று மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு வாக்குறுதி அளித்து விட்டு, இறுதியில் அதிலிருந்தும் பின்வாங்கியது. “நீட் தேர்வுக்கு ஒரு வருடம் விலக்களித்து அவசரச் சட்டம் கொண்டு வர மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது”, என்று முதல் நாள் உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட மத்திய பா.ஜ.க. அரசு, பிறகு வந்த இறுதிக்கட்ட விசாரணையின் போது, “தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது”, என்று கைவிரித்து, கிராமப்புற மாணவர்களின் தலையில் பேரிடியை இறக்கியது.


நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்த்து, சட்டரீதியாகப் போராடும் வகையில் அதுதொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில், தன்னையும் இணைத்துக் கொண்டவர் மாணவி அனிதா. நீதி கேட்கும் போராட்டத்தில், அறிவாலயத்தில் என்னையும் சந்தித்து ரத்தத்தால் எழுதப்பட்ட கடிதத்தை அவர் வழங்கியது என் நினைவிலிருந்து விலக மறுக்கிறது. அந்தச் சந்திப்பை எண்ணி இப்போதும் என் உள்ளம் பதறுகிறது. அனிதா தன் மனுவில் கையெழுத்திட்ட ரத்தத்தின் ஈரம் காய்வதற்குள், இன்று உயிரைத் துறந்து விட்டார் என்பது இதயத்தை கனக்க வைக்கிறது. மத்திய - மாநில அரசுகள் “ரகசிய கூட்டணி” வைத்து அமல்படுத்திய நீட் தேர்வுக்கு மாணவி அனிதா பலியாகி இருக்கும் நிகழ்வு கண் கலங்க வைக்கிறது.


இந்தப் படுபாதகச் செயலுக்கு, மத்திய அரசும் அதற்குத் துணை நின்று மாணவர்களை ஏமாற்றிய மாநில அதிமுக அரசுமே முழுப் பொறுப்பு. அனிதா மட்டுமல்ல, இன்னும் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் தங்களின் மருத்துவக் கனவு சீரழிந்து போன சோகம் தாங்க முடியாமல் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், தன்மானத்தையும், சுயமரியாதை யையும் சுடரொளியாக ஏற்றி வைத்துள்ள மண் இந்தத் தமிழ் மண். தங்களின் உரிமைகளுக்காகப் போராடி வெற்றிபெற்றது தான் தமிழர்களின் வரலாறு.


ஆகவே நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்காத மாணவ - மாணவியர்கள் யாரும் தயவுசெய்து மாணவி அனிதா போன்று விபரீத முடிவினை எடுத்திட வேண்டாமென்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தின் உரிமைகளைப் போராடி வென்றெடுப்போம். கிராமப்புற மாணவர்களின் மீதும், சமூகநீதிக் கொள்கை மீதும் அக்கறை காட்டும் ஒரு பொறுப்புள்ள அரசு மத்தியில் நிச்சயம் அமையும். அப்போது, மாணவி அனிதாவின் தியாகம் நிச்சயம் வெற்றி பெறும். அதுவரை யாரும் தங்களுடைய உயிரைத் தியாகம் செய்யாமல், தயவுசெய்து பொறுத்திருங்கள் என்று கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்."


என தெரிவித்துள்ளார்.