சேலம் பெரியார் பல்கலைக்கழகம் இந்தியாவுக்கு பாரா ஒலிம்பிக் நாயகன் மாரியப்பனைக் கொடுத்தது. தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இயக்குநர் அங்கமுத்து மரணத்துக்குப் பிறகு இன்னும் அந்தப் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது அந்தப் பணியை உளவியல் பேராசிரியர் கூடுதல் பொறுப்பாக கவனித்துவருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது பற்றி மாணவர்கள் கூறியபோது; ஒரு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர், பதிவாளர், கன்ட்ரோலர் இல்லாமல் பொறுப்பு நியமிக்கப்படலாம். ஆனால், உடற்கல்வி இயக்குநர் பதவி கட்டாயமாக பல்கலைக்கழகத்துக்குத் தேவை. 4 மாவட்டங்களில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் உடற்கல்வி தலைமைப் பாடமாக உள்ளது. 


பல்கலைக்கழகத்துக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள், இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டி, இந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களை அனுப்புவதற்கும், அவர்களைத் தயார் படுத்துவதற்கும் உடற்கல்வி இயக்குநர் பணி மிக முக்கியமான ஒன்றாகும்.


இந்தப் பதவிக்குப் பொறுப்பு நியமிக்கப்பட்டால் அவர்கள் இந்தத் துறையில் முழுமையான கவனம் செலுத்தமாட்டார்கள். தன் துறைக்கு நிரந்தரமான ஆள் இல்லை என்று விளையாட்டு வீரர்களின் மனமும் தோய்வடைந்து போகும். அவர்கள் சார்ந்துள்ள விளையாட்டில் வெற்றி பெற முடியாத நிலை உருவாகும்.


அதனால் உடனே புதிய உடற்கல்வி இயக்குநரை நியமிக்க வேண்டும். இல்லையென்றால், புதிய உடற்கல்வி இயக்குநர் நியமிக்கும் வரை அரசுக் கல்லூரிகளில் உள்ள உடற்கல்வி இயக்குநரை டெபுடேஷன் முறையில் நியமித்து விளையாட்டுத் துறையில் உள்ள மாணவ, மாணவிகளை பல்கலைக்கழக போட்டிகள், மாநில அளவிலான போட்டிகள், இந்திய அளவிலான போட்டிகள், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்குபெறும் வகையில் தயார்படுத்தி அனுப்பி வைக்க வேண்டும்' என்று கூறினார்.