கனடா அரசுக்கும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வைகோ நன்றி தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


சென்னை: ஈழத் தமிழ் இன அழிப்புக்கு ஐ.நா. நீதி விசாரணை செய்ய வேண்டும் எனக்கோரி, கனடா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.


அந்தத் தீர்மானத்தில், வன்முறையாலும், போராலும் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் மக்களுக்கு இரங்கலைத் தெரிவித்து இருப்பதுடன், மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்குமாறும் இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டு இருக்கின்றது.


ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் 30/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களின்படி, தெளிவான கால அட்டவணை வகுத்துச் செயல்படுமாறு, இலங்கையிடம் கனடா அரசு முன்பு விடுத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி இருக்கின்றது.


இலங்கையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலைத் தாக்குதல், 2009 ஆம் ஆண்டில் இறுதிக் கட்டப் போர் குறித்தும் விசாரணை செய்வதற்கு, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை அமைப்பு ஒன்றை அமைக்குமாறு, கனடா நாடாளுமன்றம், ஐக்கிய நாடுகள் சபைக்குக் கோரிக்கை விடுத்து இருக்கின்றது.


கனடா நாடாளுமன்றம் நிறைவேற்றி இருக்கின்ற இந்தத் தீர்மானம், ஈழத்தமிழர் படுகொலைக்கு உரிய நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது.


கனடா அரசுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்தப் பிரச்சினையில் உரிய நீதி கிடைப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.


இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.