குட்கா வழக்கில்; CBI உண்மை குற்றவாலிகளை தப்ப விடுகிறதா?
குட்கா வழக்கில்; CBI உண்மை குற்றவாலிகளை தப்ப விடுகிறதா? என திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்!
குட்கா வழக்கில்; CBI உண்மை குற்றவாலிகளை தப்ப விடுகிறதா? என திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...
"குட்கா ஊழல் தொடர்பாக டைரியில் இடம் பெற்றுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக காவல்துறை டி.ஜி.பி.யாக இருக்கும் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் அதே பதவியில் தொடர்ந்து நீடிப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் நிர்வாகத்திற்கு அவமானகரமாகவும் இருக்கிறது.
இப்போது அமைச்சருக்கு சம்மன் அனுப்பி இரு நாட்கள் சி.பி.ஐ முன்பு பலமணிநேர விசாரணைக்கு ஆஜரான பிறகும் எந்தவித நாணமுமின்றிப் பதவியில் தொடருகிறார் என்பது பொதுவாழ்வில் தூய்மை, அலுவலகப் பணிகளில் நேர்மை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை சுக்கு நூறாக உடைத்துப் போட்டிருக்கிறது.
அது மட்டுமின்றி இன்னொரு பக்கம் ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடு தொடர்பாக கைப்பற்றப்பட்ட 89 கோடி ரூபாய் லஞ்ச பட்டியல் வழக்கிலும் விஜயபாஸ்கர் பெயரை சேர்க்காமல் அவரை சென்னை மாநகர காவல்துறை ஆணையரும், சென்னை மாநகராட்சி ஆணையரும் தப்ப விட்டுள்ளார்கள்.
அதையும் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது. இப்படி அடுத்தடுத்து ஆர்.கே.நகர் வழக்கு, குட்கா வழக்கு போன்றவற்றில் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்றும் உள்நோக்கத்துடன் அ.தி.மு.க அரசு செயல்பட்டு வருவது ஒரு புறமிருக்க, உச்சநீதிமன்ற உத்தரவின்படி விசாரணையை எடுத்துக் கொண்ட சி.பி.ஐ அமைப்பும் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் ஆகியோரை எப்படியாவது காப்பாற்ற நினைக்கிறதோ என்ற வலுவான சந்தேகம் எழுந்திருக்கிறது.
இந்த வழக்கினை விசாரித்து வந்த சி.பி.ஐ அதிகாரிகள் திடீரென்று மாற்றப்பட்ட போது அவர்களை மீண்டும் அதே பதவிகளில் நியமிக்க வேண்டும் என்று தி.மு.க.வின் சார்பில் கோரிக்கை விடுத்தேன். ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல் இருப்பதால் சி.பி.ஐ விசாரணை எந்த திசை நோக்கி நகருகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
டி.ஜி.பி வீடு சி.பி.ஐ அதிகாரிகளால் சோதனையிடப்பட்டும் இன்று வரை அவர் விசாரணைக்காக அழைக்கப்படாததும், குட்கா டைரியில் இடம்பெற்றுள்ள அவர் தமிழக காவல் துறைக்கு இன்னும் தலைமை தாங்குவதும், பயிரை மேய்ந்த வேலியைப் பார்த்துக் கொண்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
புகழ் பெற்ற தமிழ்நாடு காவல்துறையின் பெருமைக்கு சிறுமை சேர்த்திடும் பேரிழுக்கு என்பது மட்டுமின்றி, ஒட்டு மொத்த காவல்துறை அமைப்பில் ஒழுக்கமும், கட்டுப்பாடும் உருக்குலைவதற்கும் காரணமாக அமைந்து வருகிறது. லஞ்ச ஊழல் தடுப்புத்துறை முறையாக இந்த வழக்கை விசாரிக்காது என்றுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சி.பி.ஐ விசாரணை கோரப்பட்டது.
அப்படி உச்சநீதிமன்றமே சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் சி.பி.ஐ அமைப்பின் விசாரணை ஒட்டுமொத்த “குட்கா” டைரி விவகாரத்தை இப்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களுடன் அரைகுறையாக முடித்து விட்டு, அமைச்சர், டி.ஜி.பி. போன்றோரை தப்பவிடும் நோக்கில் அமைந்துள்ளதோ என்ற நியாயமான கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.
இந்நிலையில் சி.பி.ஐ. ரெய்டு நடத்திய அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டு உண்மை குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ள இந்த விசாரணை சிறிதும் தடம் மாறி விடாமல் சட்டப்படி நேர்மையான பாதையில் செல்வதற்கேற்றபடி எச்சரிக்கையுடன் பாதுகாத்திட வேண்டிய பொறுப்பும், கடமையும் சி.பி.ஐ அமைப்பிற்கு இருக்கிறது என்றும், அமைச்சரையும், டி.ஜி.பி.யையும் விடுவிக்கும் நோக்கில் விசாரணையின் பாதை தலைகீழாக மாறுமேயானால் தி.மு.க. உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடுவதற்குத் தயங்காது என்றும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஊழல் புகாருக்கு உள்ளாகியிருக்கும் முதல்-அமைச்சர், “குட்கா அமைச்சரை” ராஜினாமா செய்யச் சொல்வார் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், இருவரும் ஒரே மாதிரியான சிறகுகள் கொண்ட கரும்பறவைகள். ஆகவே சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை ஆளுநர் மேற்கொள்ள வேண்டும்.
குட்கா ஊழல் வழக்கின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ள தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு பொறுப்பில் இருக்கும் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, தலை சிறந்த தமிழகக் காவல்துறை அப்பழுக்கற்ற, ஊழல் கறைபடியாத தலைமையின் கீழ் முறையாகச் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.