‘குறைந்த தொகைக் கொடுத்து அவமானப்படுத்த வேண்டாம்.!’ தமிழக அரசுக்கு செ. உயர்நீதிமன்றம் சொன்ன ‘அட்வைஸ்’
பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு பாரபட்சம் காட்டப்படவில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை நிர்ணயித்து வழங்கக்கோரி நேத்ரோதயா என்ற அமைப்பு 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தது. கடந்த முறை இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உதவித்தொகையை அதிகரித்து வழங்குவதில் சமூக நலத்துறை அக்கறையுடன் செயல்படவில்லை என்றும், குறைவான உதவித்தொகை வழங்கி அவமானப்படுத்த வேண்டாமெனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
மேலும் படிக்க | மாற்றுத்திறனாளிகள் பயங்கரவாதிகளா?- கைது செய்த காவல்துறைக்கு ராமதாஸ், தினகரன் கண்டனம்
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு பாகுபாடு காட்டப்படவில்லை எனவும், நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அரசு வழங்கி வருவதாகவும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 21 வகையான மாற்றுத் திறனாளிகளில் 5 வகையினர் வேலைக்கு சென்று வருமானம் ஈட்ட முடியாதவர்கள் என்பதால் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 2000 ரூபாய் வீதம் வழங்கப்படுவதாகவும், மற்ற அனைத்து வகையினருக்கும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. உதவித் தொகை மட்டுமல்லாமல் போக்குவரத்தில் சலுகை, மருத்துவ உதவி, ரேசன் சலுகை உள்ளிட்டவற்றையும் வழங்கி வருவதாக தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதியான வாழ்க்கை குறித்துக் கேட்கவில்லை என்றும், அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கான அரசின் நடவடிக்கைகள் குறித்தே நீதிமன்றம் அறிய விரும்புவதாகவும் தெரிவித்தனர். பின்னர் சமூக நலத்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க மறுத்த நீதிபதிகள், அவர் ஆஜராகி நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்து, வழக்கு விசாரணையை ஜூன் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும் படிக்க | கோரிக்கையை நிறைவேற்றுவதாக அரசு உறுதி: மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வாபஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR