உதவித்தொகையை உயர்த்திக் கேட்டுப் போராடிய மாற்றுத்திறனாளிகளைக் கைது செய்த காவல்துறைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை ரூ.1000லிருந்து ரூ.3000ஆகவும், கடுமையான பாதிப்பு கொண்டவர்களுக்கு ரூ.1500லிருந்து ரூ.5000ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சென்னையில் இன்று கோட்டையில் குடியேறும் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தது.
அதன்படி, மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான உதவித்தொகையை உயர்த்தக் கோரி இன்று சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டத்தைத் தொடங்கினர். அவர்கள் எழிலகம் அருகே வந்தபோது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். தடையை மீறி போராட்டம் நடத்திய 1500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டு கோயம்பேடு பேருந்து நிலையம், திருமண மண்டபம் உள்ளிட்ட ஒருசில இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தக் கைது நடவடிக்கைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
''மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.1000லிருந்து ரூ.3000ஆகவும், கடுமையான பாதிப்பு கொண்டவர்களுக்கு ரூ.1500லிருந்து ரூ.5000ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி மாற்றுத்திறனாளிகள் சென்னையில் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்களின் கோரிக்கையை பாமக ஆதரிக்கிறது!
இந்தப் போராட்டத்திற்காக சென்னைக்கு புறப்பட்ட மாற்றுத்திறனாளிகளை திருச்சி உள்ளிட்ட பல ஊர்களில் ரயில் நிலையங்களில், ஏதோ பயங்கரவாதிகளைப் போலக் கருதி காவல்துறை தடுத்துக் கைது செய்துள்ளது. சென்னையிலும் கைது வேட்டை தொடர்ந்தது. காவல்துறையின் செயல் கண்டிக்கத்தக்கது!
மாற்றுத்திறனாளிகள் அவர்களின் கோரிக்கைகளுக்காகப் போராடுவது அவர்களின் உரிமை. கடவுளின் குழந்தைகளான அவர்களைத் தடுப்பதும், தாக்குவதும் மன்னிக்க முடியாதவை. மாற்றுத்திறனாளிகளின் தேவைகளையும், உணர்வுகளையும் மதித்து அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்!''
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | இதுதான் திமுக அரசின் சமூக நீதியா?- சீமான் கண்டனம்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு:
''உதவித்தொகையை உயர்த்திக் கேட்டு போராடுவதற்காகச் சென்னை வந்த மாற்றுத் திறனாளிகளை பல இடங்களில் தடுத்து நிறுத்தி, கைது செய்வதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தி.மு.க.அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்
கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர நினைக்காமல் மனசாட்சியின்றி காவல் துறையை வைத்து அவர்களை அலைக்கழிப்பது சரியானதா?''
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.
மேலும் படிக்க | Dubash: தமிழகத்தின் முதல் பெண் துபாஷ் ராஜலட்சுமி! சட்டமன்ற சபாநாயகரின் உதவியாளர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR