தமிழச்சி பத்மபிரியா, சந்தோஷ் ஆகியோர் பாபு ம.நீ.ம கட்சியிலிருந்து விலகினர்: கமலுக்கு டபுள் ஷாக்
கட்சியின் பொதுச் செயலாளரான சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ் மற்றும் இளம் சமூக ஆர்வலரான பத்மபிரியாவும் இன்று ம.நீ.ம கட்சியிலிருந்து விலகினர்.
சென்னை: புகழ்பெற்ற நடிகரும் அரசியல் தலைவருமான கமல்ஹாசன் 2018 ல் மக்கள் நீதி மய்யம் என்ற தனது அரசியல் கட்சியைத் துவக்கினார். சமீபத்தில் நடந்துமுடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய கட்சிகளில் கமலின் ம.நீ.ம கட்சியும் ஒன்றாக இருந்தது. எனினும் சட்டமன்றத் தேர்தலில் கட்சி படுதோல்வி அடைந்தது. தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு கட்சியில் இருந்த பல முக்கிய நபர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்.
இன்று ம.நீ.ம (MNM) கட்சித் தலைவர் மேலும் இரண்டு அதிர்ச்சிகளை எதிர்கொண்டார். கட்சியின் பொதுச் செயலாளரான சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ் கட்சியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். தான் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், கமலுடனான நட்பு தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்திலிருந்து இன்று வெளியேறிய மற்ற முக்கியமான நபர் பத்மபிரியா. இளம் சமூக ஆர்வலரான இவர் கட்சியின் முக்கிய புள்ளியாக பார்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரவாயிலிலிருந்து போட்டியிட்ட அவர் தோல்வியுற்றார். கட்சியிலிருந்து விலக அவரும் தனிப்பட்ட விஷயங்களையே காரணம் காட்டினாலும் தனது சமூக சேவையைத் தொடருவதாக தனது தொகுதி மக்களுக்கு உறுதியளித்தார்.
ALSO READ: துரோகிகளை களை எடுப்போம், கோழைகளை பொருட்படுத்தவேண்டாம்: கமல்ஹாசன் காட்டம்
முன்னதாக, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து துணைத் தலைவர் மகேந்திரன் (Mahendran) விலகுவதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி, துணை தலைவர் பொன்ராஜ், பாண்டிச்சேரி துணைத் தலைவர் தங்கவேலு, பொதுச் செயலாளர்கள் சந்தோஷ் பாபு, சி.கே.குமரவேல், முருகானந்தம், மவுரியா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் உமாதேவி ஆகியோரும் பதவி விலகலுக்கான கடிதத்தை அளித்தனர்.
இந்த சட்டமன்றத் தேர்தல்கள் பல வகைகளில் மாறுபட்டிருந்தன. பல புதிய முகங்களும் கட்சிகளும் இடம்பெற்றன. அவ்வகையில் பலரது ஆர்வத்தை ஈர்த்த கட்சிகளில் ஒன்றாக இருந்தது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். எனினும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான முடிவுகள் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இல்லை.
போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் ம.நீ.ம கட்சி தோல்வியையே சந்தித்தது. கட்சித் தலைவர் கமல்ஹாசன் (Kamal Haasan) மட்டும் அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு கடும் சவாலாக இருந்தார். அதிக நேரம் முன்னிலையில் இருந்த அவர் இறுதியாக பாஜக-வின் வானதி சீனிவாசனிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றார்.
ALSO READ: கட்சியில் கடுமையான மாற்றங்கள் இருக்கும்: கட்சி நிர்வாகிகளை எச்சரித்தார் கமல்ஹாசன்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR