சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று திமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார்.
இந்த சட்டமன்றத் தேர்தல்கள் பல வகைகளில் மாறுபட்டிருந்தன. பல புதிய முகங்களும் கட்சிகளும் இடம்பெற்றன. அவ்வகையில் பலரது ஆர்வத்தை ஈர்த்த கட்சிகளில் ஒன்றாக இருந்தது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். எனினும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான முடிவுகள் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இல்லை.
போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் ம.நீ.ம (MNM) கட்சி தோல்வியையே சந்தித்தது. கட்சித் தலைவர் கமல்ஹாசன் மட்டும் அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு கடும் சவாலாக இருந்தார். அதிக நேரம் முன்னிலையில் இருந்த அவர் இறுதியாக பாஜக-வின் வானதி சீனிவாசனிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றார்.
ALSO READ: கோவை தெற்குத் தொகுதியில் பிஜேபியின் வானதி வெற்றி, MNM கமலஹாசன் தோல்வி
இதற்கிடையில், சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்க, கமல்ஹாசன் (Kamal Haasan) நேற்று முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தினார். தோல்விக்குப் பிறகு முக்கிய நிர்வாகிகள், வேட்பாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் தேர்தல் பணி, வாக்கு சதவீதம் குறைந்ததற்கான காரணம் ஆகியவை குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்ந்த கமல்ஹாசன், கட்சியின் கட்டமைப்புகளில் உடனடியாக பல மாற்றங்கள் வரும் என்று தெரிவித்துள்ளார். இந்த மாற்றங்கள் கடுமையாக இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் முதலில் தேர்தல் களம் கண்டபோது பெற்ற வாக்கு சதவீதத்தை விட தற்போது சட்டமன்றத் தேர்தலில் ம.நீ.ம கட்சிக்கு கிடைத்த வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. இதனால் கட்சியில் பல தீவிரமான மாற்றங்களும் சீர்திருத்தங்களும் இருக்கும் என கூறப்படுகின்றது.
தொண்டர்கள் சோர்ந்து போக வேண்டாம் என்றும், கட்சிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் பல முடிவுகளை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் ஆலோசனைக் கூட்டத்தில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் தேர்தல் (TN Assembly Election) களம் களைகட்டத் துவங்கியபோது, இது ஒரு ஐந்துமுனைப் போட்டியாக இருந்தது. எனினும், தேர்தல் முடிவுகள் இது வெறும் இருமுனை போட்டியாக சூருங்கி விட்டதைக் காட்டுகின்றன. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், திராவிடக் கட்சிகளைத் தாண்டி சிந்திக்க தயாராக உள்ளார்கள் என பல பேச்சுகள் இருந்தன. எனினும், தெர்தல் முடிவுகள் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்றே சுட்டிக்காட்டுகிறது. தமிழகத்தில் இன்றளவிலும் முக்கிய போட்டி அதிமுக, திமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கு இடையில் மட்டும்தான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
ALSO READ: மக்களுக்காக உழைக்க முன்வந்ததே கமலின் வெற்றி: கமலை பாராட்டிய பார்த்திபன்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR