மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் விநாடிக்கு 65,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேட்டூர் அணை நீர் திறப்பு காரணமாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் 12 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து நொடிக்கு 64,598 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. பிலிகுண்டுலு, ஒகேனக்கலைக் கடந்து மேட்டூர் அணைக்கு நொடிக்கு 71,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.


இதன் காரணமாக மேட்டூர் அணை 43-வது முறையாக அந்த அணை முழு கொள்ளளவை எட்டியது. அணையில் நீர் இருப்பு 94.5 டி.எம்.சியாக உள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணையில் இருந்து நொடிக்கு 65,000 கன அடி வீதம் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் இரு கரைகளையும் அணைத்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் ஆற்றங்கரை ஓரம் உள்ள வீடுகளை ஒட்டிய படி காவிரி நீர் பாய்கிறது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பாக இருக்கும்படி வருவாய்த்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கலைமகள் வீதி, மணிமேகலை தெரு, பாலக்கரை, அண்ணாநகர், சின்னப்ப நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


இதனிடையே 13 நிவாரண முகாம்கள் தாயார் நிலையில் உள்ளதாகவும், மேலும் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள பொது மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள இந்நிலையில், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஆற்றங் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.