புதுடெல்லி: ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக-வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது என்றும், அந்த சின்னம் முடக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. அதற்கு வருகிற ஏப்ரல் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. 


இதில் அதிமுக-வில் சசிகலா அணியில் தினகரனும், பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். கட்சியின் சின்னமான இரட்டை இலை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என இரு தரப்பினரும், டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். 


சசிகலா அணி மற்றும் பன்னீர்செல்வம் அணி ஆகியோரின் தரப்பு வாதங்கள் நடந்து நிறைவடைந்தன. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி ஆலோசனை நடத்தினார்.


இதையடுத்து நஜிம் ஜைதி நேற்று இரவு தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதில், இரட்டை இலை யாருக்கும் இல்லை என அறிவித்து அச்சின்னத்தை முடக்கி வைத்து உத்தரவிட்டார். இதனால் இரு தரப்புக்கும் இரட்டை இலை இல்லை என்றாகிவிட்டது.


தேர்தல் கமிஷனின் இந்த முடிவு பற்றி தெரிய வந்ததும், இரு தரப்பினரும் தங்கள் அடுத்து கட்ட நடவடிக்கை குறித்து தனித்தனியாக அவசர ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர்.


தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-


இரட்டை இலை சின்னம் இருதரப்பிற்கும் இல்லாமல் முடக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் சின்னத்தையோ, கட்சியின் பெயரையோ எங்கும் பயன்படுத்தக்கூடாது. இரட்டை இலை சின்னம் முடக்கம் என்பது இடைக்கால உத்தரவுதான். இருத்தரப்பினரும், நியாயமாக நடந்து கொள்ளவே இப்படியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளது.