தமிழக மருத்துவக் கல்வி இயக்குநராக எட்வின் ஜோவையே மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. எட்வின் ஜோவுக்கு மருத்துவக் கல்லூரி டீனாக 10 ஆண்டு அனுபவம் உள்ளது. தகுதி அடிப்படையிலேயே எட்வின்ஜோவுக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த டாக்டர் எட்வின் ஜோ 2017 ஏப்ரலில் தமிழக மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை எதிர்த்து, கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி கயிலைராஜன் தாக்கல் செய்த மனு அடிப்படையில் டாக்டர் எட்வின் ஜோ நியமனத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.


இதை எதிர்த்து அரசுத் தரப்பில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனம் தொடர்பான அரசாணை மற்றும் தனி நீதிபதி உத்தரவையும் ரத்து செய்தது. மேலும் மருத்துவக் கல்வி இயக்குநர் பதவிக்குத் தகுதியான நபரை 6 வாரங்களில் நியமிக்கவும் உத்தரவிட்டிருந்தது.


இந்நிலையில், இந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை எனக் கூறி சுகாதாரத் துறைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ரேவதி கயிலைராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் ஒரு மனுதாக்கல் செய்தார். 


இதைனை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை வரும் பிப்ரவரி 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மருத்துவக் கல்வி இயக்குநராக ரேவதி கயிலைராஜனை நியமிப்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்காததை எதிர்த்து தொடரப்பட்ட அவதூறு வழக்கில், தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநராக எட்வின்ஜோவே மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு இன்று பதில் அளித்துள்ளது